டாலருக்கு நிகரான இந்திய மதிப்பில் ஸ்திரத்தன்மை காணப்பட்டு 75.79 ஆக நீடித்தது.
மார்ச் 7ஆம் தேதி, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு ஒரே நாளில் 8 டாலர் கூடி, 130 டாலரில் வர்த்தகமானது. இதுதான் 14 ஆண்டுகளில் இல்லாத உச்சம் என்று கூறப்பட்டது.
ஆனால், அதன் விலை நிபுணர்கள் கணிப்பை மீறி தொடர்ந்து குறைந்துகொண்டே வந்து 100 டாலருக்குக் கீழே வந்திருக்கிறது. அதேபோல தங்கம் விலையும் தகிக்கவில்லை. அதனால், சற்றே முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்தியா கடன் வாங்கிக்கொண்டு இருந்த காலம் போய், தற்போது அண்டை நாடான இலங்கைக்கு ரூ.7,500 கோடி கடனாக வழங்கி இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருகிறது என்ற தகவல் கூடுதல் பலம் சேர்க்க, மேலே மேலே பங்குகள் உயர ஆரம்பித்தன. அமெரிக்க மைய வங்கி பணக்கொள்கையால் பதறிக்கிடந்த சந்தையில் 0.25 விழுக்காடு மட்டுமே உயர்வு என வந்த செய்தி உலகப்பங்குச்சந்தைகளுக்கு உற்சாகத்தை தந்தன.
வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் இன்று(மார்ச்.17) 1, 047 புள்ளிகள் உயர்ந்தும் நிஃப்டி 312 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. வர்த்தகத்தின் இன்றைய தினத்தில் ஹெச்.டி.எஃப்சி 5 விழுக்காட்டிற்கு மேலும் ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மஹேந்திரா ஆகியன தலா 3 விழுக்காட்டிற்கு மேலும் உயர்ந்து முடிந்தன.
நாளை (மார்ச்.18) ஹோலியை முன்னிட்டு இந்தியச் சந்தைகளுக்கு விடுமுறை, இஸ்ரேலில் புதியவகை கரோனா உண்டாகியிருப்பது, வடகொரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா அளவு அதிகரிப்பது போன்றவை சற்றே பாதிப்பை உண்டாக்கினாலும் இந்தியாவின் வளர்ச்சி ஸ்திரமாக இருக்கிறது என்பதால் கவலைகொள்ளத்தேவையில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.
இதையும் படிங்க: மீண்டும் சினிமாவுக்கு திரும்பும் கருணாஸ்! அதுவும் இப்படியா?