இந்திய டெலிகாம் துறையில் 2017ஆம் ஆண்டு தனது சேவையைத் தொடங்கிய ரிலையன்ஸின் ஜியோ, பல அதிரடி ஆஃபர்களை வழங்கியது. இதன் காரணமாக இந்தியாவில் டேட்டா கட்டணம் மிகப் பெரிய அளவில் குறைந்தது. பெரும்பாலான இந்தியர்களை இணையத்துடன் இணைத்ததில் ஜியோவுக்கு பெரும் பங்கு உண்டு.
டெலிகாம் துறையில் மிகப் பெரிய புரட்சி ஏற்படுத்திய ஜியோவில், கடந்த சில வாரங்களாகவே பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துவருகின்றன. முதன்முதலில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி 43,574 கோடி ரூபாயை ஃபேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்தது.
அதைத்தொடர்ந்து சில்வர் லேக், விஸ்டா, இன்டெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஜியோவில் முதலீடு செய்தன. இந்நிலையில், 12ஆவது வாரத்தில் 13ஆவது நிறுவனமாக, குவால்காம் நிறுவனம் ரூ.730 கோடியை ஜியோவில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜியோவில் 0.15 விழுக்காடு பங்குகள் குவால்காம் நிறுவனத்தின் வசம் செல்லும்.
ஜியோ இதுவரை பெற்றுள்ள முதலீடுகள்:
தேதி | முதலீடு செய்த நிறுவனம் | முதலீட்டுத் தொகை (கோடிகளில்) | பங்குகள் |
ஏப்ரல் 22 | ஃபேஸ்புக் | ரூ.43,574 | 9.99 |
மே 4 | சில்வர் லேக் | ரூ. 5,656 | 1.15 |
மே 8 | விஸ்டா | ரூ.11,367 | 2.32 |
மே 17 | ஜெனரல் அட்லாண்டிக் | ரூ.6,598 | 1.34 |
மே 22 | கேகேஆர் நிறுவனம் | ரூ.11,367 | 2.32 |
ஜூன் 5 | முபாதலா நிறுவனம் | ரூ.9,093 | 1.85 |
ஜூன் 5 | சில்வர் லேக் (இரண்டாவது முறையாக) | ரூ.4,547 | 0.93 |
ஜூன் 8 | அபுதாபியைச் சேர்ந்த நிறுவனமான ஏடிஐஏ நிறுவனம் | ரூ.5,863.50 | 1.16 |
ஜூன் 13 | டிபிஜி நிறுவனம் | ரூ.4,546.80 | 0.93 |
ஜூன் 13 | எல் காட்டர்டன் நிறுவனம் | ரூ.1894.50 | 0.39 |
ஜூன் 18 | சவுதியின் பிஐஎஃப் நிறுவனம் | ரூ.11,367 | 2.32 |
ஜூலை 2 | இன்டெல் | ரூ.1,894.50 | 0.39 |