உலகளவில் பிரபலமான ஆப்பிள் நிறுவனம், தனது உற்பத்தி ஆலையை சீனாவிலிருந்து இந்தியாவிற்கு மாற்றுவதாகப் பரவலாக தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. ஏற்கனவே ஆப்பிளின் உற்பத்தி நிறுவனமான ஃபாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப், விஸ்ட்ரான் கார்ப் மற்றும் காம்பல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுக்கு இந்தியாவில் உற்பத்தி ஆலை உள்ளது.
அதன்படி, நான்காவது நிறுவனமாக ஆப்பிளின் இரண்டாவது மிகப்பெரிய ஐபோன் உற்பத்தியாளரான பெகாட்ரான் கார்ப்பரேஷன் (Pegatron ) இந்தியாவில் தனது உற்பத்தி ஆலையைத் திறக்கப் பதிவு செய்துள்ளது.
கடந்த ஜூலை 14 தேதியன்று, சென்னை நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகத்தில்,பெகாட்ரான் டெக்னாலஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது "ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமாக" பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக அகிலேஷ் பன்சால், சியு டான் லின் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
தற்போது, பெகாட்ரானின் நிறுவன அலுவலர்கள் பல மாநில அரசாங்கங்களுடன் தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நிலத்தைக் முடிவு செய்வது குறித்து விவாதித்து வருகின்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்போது ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்போனை சென்னையில் ஸ்ரீபெரம்புதூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆலையை விரிவுப்படுத்த ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே போல், மற்ற ஆப்பிள் உற்பத்தி நிறுவனங்களும் தங்களது ஆலை, உற்பத்தியை விரிவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் மின்னணு உற்பத்தியை உயர்த்துவதற்காக, மொத்தம் சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய் சலுகைகளை உள்ளடக்கிய மூன்று திட்டங்களை மத்திய அரசு ஏப்ரல் மாதம் அறிவித்ததையடுத்தே, பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது ஆலையை விரிவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கருதப்படுகிறது.