நாட்டின் பொருளாதாரம் மந்தமான நிலையில் செயல்பட்டு வருவதால் மோட்டர் வாகனத்துறை பெருமளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக கார் விற்பனைச் சந்தையானது முன்னெப்போதும் இல்லாத அளவில் தேக்கத்தை சந்தித்து வருகிறது. பல்வேறு உற்பத்தி மையங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டு வரும் நிலையில், அதன் தாக்கம் முன்னணி கார் நிறுவனமான நிஸ்ஸானையும் பாதித்துள்ளது.
உலகளவில் கார் உற்பத்தியை 10 சதவிகிதம் வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அந்நிறுவனம், சுமார் 12,500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்தியாவில் மட்டும் 1,700 பேர் வேலை நீக்கம் செய்யப்படவுள்ளனர். நிஸ்ஸான் நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 14 இடங்களில் நிஸ்ஸான் நிறுவனம் இயங்கி வரும் நிலையில் எங்கெல்லாம் இந்த வேலை நீக்கம் நடைபெறும் என இன்னும் உறுதியாகவில்லை. இதன் காரணமாக நிஸ்ஸான் நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.