யெஸ் வங்கி நிதி முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட டிஹெச்எப்எல் நிறுவனத் தலைவர்கள் தீரஜ் வதாவன், கபில் வதாவன் ஆகியோரை அமலாக்கத் துறை கைது செய்தது. தற்போது அவர்களின் காவலை மே 27ஆம் தேதி வரை நீட்டிப்பதாக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யெஸ் வங்கியில் 4,300 கோடி ரூபாய் அளவுக்கு நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, அந்த வங்கியின் இணை நிறுவனரான ராணா கபூா் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. நிதி முறைகேட்டில் ராணா கபூருடன் டிஹெச்எப்எல் வதாவன் சகோதரர்களுக்குத் தொடர்பிருப்பதாகப் புகார் எழுந்தது.
அதைத் தொடா்ந்து, நிதி முறைகேடு தொடர்பாக சிபிஐ பதிவுசெய்த வழக்கில் வதாவன் சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சூழலில், நிதி முறைகேடு தொடர்பாக நிதி மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவுசெய்த வழக்கில் அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
யெஸ் வங்கி முறைகேடு: அமலாக்கத் துறை வளையத்தில் வதாவன் சகோதர்கள்
மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் வதாவன் சகோதரர்களை அமலாக்கத் துறை அலுவலர்கள் முன்னிறுத்தினர். அவர்களை 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அலுவலர்களுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. ராணா கபூரையும் அமலாக்கத் துறை ஏற்கெனவே காவலில் எடுத்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர்களின் காவலை மே27 ஆம் தேதி வரை நீட்டித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.