கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக இந்திய பொருளாதாரம் முற்றிலும் முடங்கியது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், இந்தியா 2020-21ஆம் நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியில் வேளாண் துறையையே பெரிதும் நம்பியிருப்பதாகவும், விவசாயத் துறை உற்பத்தி சுமார் 40 விழுக்காட்டிற்கு மேல் உயரும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவிலுள்ள விவசாய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும் விநியோக சங்கிலியை மேம்படுத்தவும் புது டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குகின்றன.
மேலும், விவசாய பொருள்களின் மதிப்பை கூட்டி அதிக விலைக்கு விற்க Azure FarmBeats என்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சேவையை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். காலநிலை, பருவம், மழை ஆகிய தரவுகளை கணக்கிட்டு அறுவடையை அதிகரிக்கவும் Azure FarmBeats சேவை உதவும்.
இதுதவிர விவசாயிகளுக்கு கடன் உதவியும், தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் மைக்ரோசாப்ட் வழங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் பணிபுரிய ஆர்வமாகவுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு: மோடியின் இன்னொரு மாயை - அஹ்மத் படேல் சாடல்