கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதிச்சுமையில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் நேற்று பதவி விலகினர். சகபங்குதாரர்களின் அழுத்தத்தின் பேரில் இம்முடிவுக்கு வந்த நரேஷ் கோயல், நிறுவனத்தை காப்பாற்றுவதே என் நோக்கம், அதற்காக எதையும் செய்யத் தயார். 22 ஆயிரம் ஊழியர்களின் நலனே எனக்கு முக்கியம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அவரின் இந்த முடிவுக்குப்பின் அந்நிறுவனத்தின் பங்குகள் மும்பைப் பங்குச்சந்தையில் 12.69 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 15.46 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
25 வருடங்களாக இயங்கிவரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உடனடி நிதியுதவியாக ரூ.1,500 கோடி பெறவுள்ளது. அத்துடன் நிர்வாகக் குழுவிற்கு புதிதாக இரண்டு உறுப்பினர்களை நியமிக்கவும், நிலவி வரும் சிக்கலை சீர்செய்ய இடைக்கால குழு ஒன்றையும் அமைக்க முடிவெடுத்துள்ளது. 15 நாடுகளுக்கான விமான போக்குவரத்தைவரும் ஏப்ரல் மாதம் வரைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், சுமார் 80 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் தற்போது இயங்காத நிலையில் உள்ளன. அத்துடன் வாடகை செலுத்தாததால் 54 விமானங்கள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.