அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் வெகு தீவிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அந்நாட்டின் முக்கிய நகரங்களான நியூயார்க், வாஷிங்டன், கலிஃபோர்னியா ஆகியவற்றில் நாளொன்றுக்கு நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது.
அந்நாட்டில் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரேநாளில் 11 ஆயிரத்தை தாண்டிய நிலையில், 24 மணி நேரத்தில் 225 பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் முகக்கவசம், வென்ட்டிலேட்டர் ஆகியவற்றுக்கு கடும் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், அங்குள்ள மருத்துவர்கள் உரிய ஓய்வின்றி தவித்துவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, இந்தியாவைச் சேர்ந்த முன்னணி தங்கும்விடுதி நிறுவனமான ஓயோ, அமெரிக்க மருத்துவர்களுக்குத் தற்போது உதவிக்கரம் நீட்டியுள்ளது. கரோனா பாதிப்பால் இரவு, பகல் பாராமல் உழைக்கும் மருத்துவர்கள் தங்கள் விடுதியில் இலவசமாகத் தங்கி ஓய்வெடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
ஓயோவின் இந்த அறிவிப்பால் நெகிழ்ந்துபோன அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மக்களின் உயிரைக் காப்பாற்றும் மருத்துவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய ஓயோ நிறுவனத்திற்கு நன்றி, நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் எந்தவொரு தடைகளையும் கடந்துவிடலாம் என்று நம்பிக்கையுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை - ஆயிரத்தை தொட்டது