டெல்லி: வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், ஆரோக்கிய சஞ்சீவினி காப்பீட்டு திட்டத்தை குழுவாக வழங்க ஐஆர்டிஐஏ அனுமதியளித்துள்ளது.
ஆரோக்கிய சஞ்சீவினியில் தனிநபர் அல்லது குழு காப்பீடு பெற்றவர்கள் கரோனா சிகிச்சைக்கான காப்பீடு கோரலை மேற்கொள்ள முடியும் என இந்திய காப்பீடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்த முடியாது. உயர்ந்து வரும் மருத்துவ பணவீக்கம், அதிகரித்து வரும் வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள், கரோனா போன்ற புதிய நோய்க் கிருமித் தொற்றுகளின் திடீர் எழுச்சி இவற்றின் காரணமாக மருத்துவக் காப்பீட்டின் தேவை பலமடங்கு வளர்ந்துள்ளது.
கரோனா கவச்: காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளுங்கள்!
ஆனால் பல தேர்வுகள் காப்பீட்டுச் சந்தையில் கிடைக்கும் நிலையில், தேர்ந்தெடுக்கும் முறை சிக்கலானதாகவும், நேரம் எடுப்பதாகவும் இருப்பதால் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் குழம்பி விடுகின்றனர்.
எனவே காப்பீடு வழங்கும் நிறுவனங்கள் ஒரு பொதுவான காப்பீட்டுத் திட்டத்தை தொடங்குவதை கட்டாயமாக்கி உள்ளது இந்திய காப்பீடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் (IRDAI). அதன் சமீபத்திய வழிகாட்டுதலின் படி அனைத்து பொது மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கும் நிறுவனங்களும் ஏப்ரல் 1, 2020 முதல் ஒரே விதமான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என கூறியிருந்தது.
அந்த பொதுவான காப்பீட்டுத்திட்டத்துக்கு ஆரோக்கிய சஞ்சீவினி என்ற பொதுவான பெயரிடப்பட்டது. அத்துடன் அதை வழங்கும் நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றிருக்கும். மருத்துவ காப்பீடை எளிதானதாகவும், பொதுவானதாகவும் மாற்றுவதன் மூலம் இன்னும் அதிகப்படியான மக்களை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேர வைப்பது தான் இதன் நோக்கம்.