இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதி கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் விமான சேவைகள் மார்ச் இறுதி வாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் உள்நாட்டு விமானச் சேவை மீண்டும் தொடங்கியது.
இருப்பினும், விமானத்தில் வரும் பயணிகள் கட்டாயம் தனிமைப்படுத்தும் முகாமில் 14 நாள்கள் இருக்க வேண்டும் என்று பல மாநிலங்களும் நிபந்தனை விதித்துள்ளன. இதனால் பலரும் தங்கள் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்கின்றனர்.
அப்படி ரத்து செய்யப்படும் விமான டிக்கெட்டுகளுக்கான பணத்தை இண்டிகோ மற்றும் ஏர்ஏசியா விமான நிறுவனங்கள் பயணிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் பதில் இணைய வாலெட்டுகளில் வழங்குகின்றன. இணைய வாலெட்டுகளில் வழங்கப்படும் பணத்தை வைத்து மறுமுறை டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம். இருப்பினும் அதை மற்ற எந்த செலவுகளுக்கும் பயன்படுத்த முடியாது.
இது குறித்து EaseMyTrip.com நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் நிஷாந்த் பிட் கூறுகையில், "தற்போது ஏர்ஏசியா, இண்டிகோ நிறுவனங்கள் இணைய வாலெட்டுகளில் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டிகளுக்கான பணத்தை வழங்குகின்றன. இருப்பினும் விரும்பும் பயணிகளுக்கு, அவர்களின் வங்கிக் கணக்குகளிலேயே பணத்தை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்" என்றார்.
ஊரடங்கிற்கு முன் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தை ஏர்ஏசியா, இண்டிகோ விமான நிறுவனங்கள் இணைய வாலெட்டுகள் வழியாக மட்டுமே வழங்கிவந்தன.
இதையும் படிங்க: 2ஆம் நாளில் 41 ஆயிரம் பயணிகள் - விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பெருமிதம்