கோவிட்-19 தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணிபுரிய ஊக்குவித்துவருகிறது. அதன்படி உலகில் மிகப்பெரிய டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் தற்போது வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்துவருகின்றனர்.
இந்நிலையில் ஜூலை 6ஆம் தேதி முதல் கூகுள் நிறுவனத்தின் அலுவலகங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் நிறுவன தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜூலை 6ஆம் தேதி முதல் கூகுள் நிறுவனத்தின் அலுவலகங்கள் திறக்கப்படும்.
சுமார் 10 விழுக்காடு ஊழியர்கள் மட்டுமே கண்டிப்பாக அலுவலகங்களுக்குத் திரும்ப வேண்டிய பணியில் இருக்கிறார்கள். ஜூலை 6ஆம் தேதி அலுவலகம் திரும்ப வேண்டிய ஊழியர்களுக்கு ஜூன் 10ஆம் தேதி இது குறித்த தகவல் அளிக்கப்படும்.
மற்றவர்கள் விருப்பப்பட்டால் அலுவலகத்திற்குச் சென்று வேலை செய்யலாம். இருப்பினும், ஊழியர்கள் இந்தாண்டு முழுவதும் வீட்டிலிருந்தே வேலை செய்யவதையே கூகுள் ஊக்குவிக்கிறது. வீட்டிலிருந்து வேலை செய்பவர்களின் செலவுக்காக அனைத்து ஊழியர்களுக்கும் ஆயிரம் டாலர்கள் கூடுதலாக வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நிலைமை அனைத்தும் ஏற்ற வகையிலிருந்தால் செப்டம்பர் மாதத்தில் 30 விழுக்காடு ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்பலாம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிகக் குறைந்த விலையில் வயர்லெஸ் இயர்போனை வெளியிட்ட சியோமி