பிளாஸ்டிக் பயன்பாட்டை பல்வேறு நிறுவனங்கள் படிப்படியாகக் குறைத்து வருகின்றன. அந்த வகையில், கூகுள் நிறுவனம் தனது தயாரிப்புகளில் பிளாஸ்டிக்கை முற்றிலுமாகத் தவிர்க்க முடிவு செய்துள்ளது. மேலும், 2025ஆம் ஆண்டில் முழுமையாக மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து சஸ்டைனபிலிட்டி சிஸ்டம்ஸ் கட்டடக் கலைஞர் டேவிட் பார்ன் கூறுகையில், "2016ஆம் ஆண்டு முதலே பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கூகுள் குறைத்து வருகிறது. ஆனால் 100 விழுக்காடு பிளாஸ்டிக் இல்லாத இலக்கை அடைவதற்கு நிறைய கடின உழைப்பு தேவைப்படுகிறது. எங்கள் தயாரிப்புகளை பாதுகாக்க மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
கூகுள் அதன் அனைத்து தயாரிப்புகளிலும் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்கள் இருக்கும் எனக் கடந்த ஆண்டு உறுதி அளித்திருந்தது. அதேபோல், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சல் 5இன் ஸ்மார்ட்போன் 100 விழுக்காடு மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.