இந்தியாவின் பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப்கார்ட், அதானி குழுமத்துடன் வணிக ரீதியான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன்மூலம், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்க முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும் ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது மூன்றாவது தரவு மையத்தைச் சென்னையில் நிறுவ உள்ளது.
மேலும், அதானி லாஜிஸ்டிக்ஸ் மும்பையில் 5,34,000 சதுர அடியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் லாஜிஸ்டிக்ஸ் கட்டடம், ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விடவுள்ளது.
இந்தக் கட்டடம் 2022-இல் மூன்றாவது காலாண்டில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்களின் பொருள்களை ஒரே நேரத்தில் இங்குச் சேமித்துவைக்க முடியும்.
இதனால், 2500 பேருக்கு நேரடியாகவும், ஆயிரக்கணக்கானோருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைப்பால் ஃபிளிப்கார்ட் பொருள்கள் விரைவு டெலிவரி உள்ளிட்ட வசதிகளைப் பெறும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'அலிபாபா'வுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம்: காரணம் என்ன?