சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற டெக் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள், மற்ற நிறுவனங்களைப் போலவே கரோனா பரவலால், தொடக்கத்தில் சரிவை எதிர்கொண்டது.
இருப்பினும், சீனாவில் இயல்புநிலை திரும்பி ஐபோன்கள் உற்பத்தி தொடங்கப்பட்டதில் இருந்து, அந்நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து ஏற்றம்கண்டு வருகின்றன. ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக அந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 11 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை ஒருமுறை வாங்கும் வாடிக்கையாளர், அதன் பிறகு மற்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்காமல் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளையே வாங்குகின்றனர். இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு தொடர்ந்து உயர்ந்துவருகிறது. 2018ஆம் ஆண்டு, ஆப்பிள் நிறுவனம் சர்வதேச அளவில் ஒரு டிரில்லியன் சந்தை மதிப்பைக் கொண்ட முதல் நிறுவனமானது.
இருப்பினும், உலகில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ’சவூதி அரம்கோ’ நிறுவனப் பங்குகளின் மதிப்பு ஆப்பிள் நிறுவனத்தைவிட உயர்ந்தது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சவூதி அரம்கோ நிறுவனம் சர்வதேச அளவில் இரண்டு டிரில்லியன் டாலர்கள் சந்தை மதிப்பைக் கொண்ட முதல் நிறுவனமானது.
இருப்பினும், அதன்பிறகு கரோனா ஊரடங்கு காரணமாக எரிபொருள் பயன்பாடுகள் குறைந்ததால் சவூதி அரம்கோ நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 1.82 டிரில்லியன் டாலர்களாக குறைந்தது. இந்நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இரண்டு டிரில்லியன் டாலர்களை கடந்துள்ளது. 2019ஆம் ஆண்டின் இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியே 2.94 டிரில்லியன் டாலர்கள்தான்.
அமெரிக்காவில் டெக் நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் முன்னணியில் இருக்கும் 500 பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பில் 23 விழுக்காடு ஆப்பிள், மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக், கூகுள் ஆகிய நிறுவனங்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியாவின் ஜிடிபி 20 விழுக்காடு வரை சரியும் - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்!