அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப்போர் நிலவி வரும் நிலையில், உலகளவில் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை ஜிஎஸ்டி உயர்வு காரணமாக முக்கிய நிறுவனங்கள் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இணைய நிறுவனமான அமேசான் 40 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை வழங்க உள்ளதாக தெரிவித்தது. இந்தியாவில் அதிக லாபம் ஈட்டுவதாகவும்; அதனை மேலும் அதிகரிக்க இந்தியாவில் பெரும் அளவில் முதலீடு செய்யவுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த 30 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு எடுக்க உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு ஆண்டுகளுக்குள் மென்பொருள் பொறியாளர்கள் முதல் கிடங்கு ஊழியர்கள் வரை அனைத்து துறைகளிலும் ஊழியர்கள் எடுக்கப்படுவார்கள் என அமேசான் தலைமை அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது இந்த வேலை வாய்ப்பு முகாம் அமெரிக்காவில் நடைபெற உள்ளதாகவும், இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் ஊழியர்களை எடுக்கும் பணித்தொடங்கும் எனவும் அமேசான் தெரிவித்துள்ளது.