கரோனா நோய்க்கிருமித் தொற்றினால் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழில்களும் முடங்கிப்போய் கிடக்கின்றன. ஆனால் அதைக் கருத்தில்கொண்டு அனைவருக்கும், அனைத்துவிதமான இடர்களுக்கு கடன் சலுகைகள் வழங்க இயலாது என இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ரியல் எஸ்டேட் சங்கத்தினர் தாக்கல்செய்த மனுவை தள்ளுபடிசெய்யும்படி கோரிய இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம், 'இந்த வழக்கு வேறுவிதமானது; இது அவரவர் சங்கத்தினர் முடிவெடுத்து தீர்த்துக்கொள்ள வேண்டியது' எனத் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது.
கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் கடன் திருப்பிச் செலுத்துவதற்கான தடை தொடர்பான ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்குப் (என்.பி.எஃப்.சி.) பொருந்துமா, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அதற்குத் தகுதியானவையா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் எழுப்பியிருந்த கேள்விக்கு, இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை இவ்வாறு (மேற்கண்ட) பதில் விளக்கம் அளித்தது.