கோவிட்-19 தொற்று காரணமா இந்திய பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்துறையினரும் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். பல நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சில நிறுவனங்கள் பணியாளர்களுக்குக் கட்டாய விடுப்பு அளித்துவருகின்றனர்.
இந்நிலையில், தனது ஊழியர்களை ஜூம் செயலி மூலம் தொடர்புகொண்ட சொமெட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தீபீந்தர் கோயல்," கடந்த சில மாதங்களில் இந்த தொழில்துறை பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. அவற்றில் சில மாற்றம் நிரந்தரமாகிவிட வாய்ப்புகள் அதிகம். அந்த சூழ்நிலைக்கு நிறுவனம் தயாராக வேண்டியது அவசியம்.
இதன் காரணமாக நிறுவனத்தின் 13 விழுக்காடு ஊழியர்கள் (சுமார் 600 ஊழியர்கள்) தொடர்ந்து சொமெட்டோ நிறுவனத்தில் பணிபுரிய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அவர்களுக்கு 50 விழுக்காடு ஊதியம் வழங்கப்படும். மற்ற இடங்களில் வேலையைப் பெற அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும்" என்றார்.
வேலையைவிட்டு நீக்கப்பட்ட ஊழியர்கள், சொமெட்டோ வழங்கிய லேப்டாப்பையும் ஸ்மார்ட்போனையும் திருப்பி அளிக்கத் தேவையில்லை என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து சம்பள குறைப்பு குறித்து பேசிய தீபீந்தர் கோயல், "அடுத்த ஆறு மாதங்களுக்கு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதன்படி குறைந்த சம்பளம் பெறுபவர்களுக்குக் குறைந்த ஊதிய பிடித்தமும் அதிக சம்பளம் பெறுபவர்களுக்கு (50 விழுக்காடு) அதிக பிடித்தமும் செய்யப்படும்.
முன்னதாக சில ஊழியர்கள் அவர்களாகவே முன்வந்து தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டனர். அவர்களுக்குக் கூடுதலாகச் சம்பளம் பிடித்தம் செய்யப்படமாட்டாது" என்றார்.
அடுத்த ஆறு முதல் 12 மாதங்களில் 40 விழுக்காடு உணவகங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்ட தீபீந்தர் கோயல், அதற்கேற்ப சொமெட்டோ தயாராகிவருவதாகவும், வரும் காலங்களில் வீட்டிலிருந்தபடியே பணிபுரிவதை நிரந்தரமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 3 நிமிட வீடியோ காலில் 3,700 பேரை வேலையை விட்டுத் தூக்கிய ஊபர்!