டெல்லி: ஸ்மார்ட் தகவல் சாதன தயாரிப்பில் உலகளவில் பெரும் மதிப்பை கொண்டிருக்கும் சாம்சங், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களை ஓரங்கட்டி சியோமி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
அதிரடி தயாரிப்புகளை, குறைந்த விலைக்கு சந்தையில் அறிமுகப்படுத்தி, கடந்த ஜூன் மாதம் மட்டும் 26 விழுக்காடு விற்பனை வளர்ச்சியை சியோமி நிறுவனம் கண்டுள்ளது.
இது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள கவுண்டர்பாய்ண்ட், நடுத்தர பயனர்களை கவரும் வண்ணம் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி, சியோமி நிறுவனம் சந்தையில் தனக்கென நிலையான பயனர்களை ஈர்த்துள்ளதுள்ளதாக தெரிவித்துள்ளது.
2011ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து மொத்தமாக நிறுவனம் 800 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் 'ஏ' சீரீஸ் தொகுப்பு நடுத்தர ஸ்மார்ட்போன்கள் விட்டுச்சென்ற சந்தையை, சியோமி தனது மி, போக்கோ போன்ற கிளை நிறுவனங்களைக் கொண்டு நிவர்த்திசெய்தது தான், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மேலும், சில்லறை விற்பனையிலும் சியோமி நிறுவனம் முழுமையாக ஈடுபட்டுள்ளதால் மிகப்பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.