உலக வங்கி சார்பில் பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறை ”தொழில் செய்ய உகந்த நாடுகள்” பட்டியல் வெளியிடப்படும். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள வரி முறை, அரசின் ஸ்திரத்தன்மை, திட்டத்திற்கு அனுமதியளிக்க எடுத்துக்கொள்ளும் காலம் உள்ளிட்ட பல விஷயங்களை கருத்தில் கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இதில் முறைக்கேடுகள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளதால், தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியல் வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து உலக வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் பல முறைகேடுகள் பதிவாகியுள்ளன. தரவுகளும் யதார்த்தமும் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன.
தரவு முறைகேடுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் சார்பில் உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழுவிற்கு இது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
இது குறித்து சுயமாக செயல்படும் ஒரு உள் தணிக்கை அமைப்பை உருவாக்கி, தரவு சேகரிப்பு முறையை மறுஆய்வு செய்யும்படி நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். மேலும் முறைகேடுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் தரவுகளை மறுபரிசீலனை செய்வோம். தணிக்கையின் முடிவுகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில், இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63ஆவது இடத்தைப் பிடித்தது. 2014 முதல் 2019 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியா 79 இடங்கள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா காரணமாக அதிகம் வேலையிழந்தவர்கள் இந்த வயதுடையவர்கள்தான்