கோவிட்-19 பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இந்திய பொருளாதாரம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தும் இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்துவருவதால் நாட்டின் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துவருகிறது.
2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொருளாதாரம் சுமார் 24 விழுக்காடு வரை சரிவைச் சந்தித்தது. இந்நிலையில், இன்று காணொலிகாட்சி மூலம் தொழில் துறை அமைப்பின் இந்திய வர்த்தக கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், நாட்டை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அரசு தற்போது வெளியிட்டுள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தரவு என்பது கரோனா தொற்றால் ஏற்பட்ட அழிவுகளின் பிரதிபலிப்பாகும். இந்திய பொருளாதாரம் தற்போது மீண்டுவருகிறது.
இருப்பினும், இன்னும் முழுமையாக மீளவில்லை. சில துறைகளின் ஜூன், ஜூலை மாதங்களின் தரவுகளை ஒப்பிட்டால் அவை சரிவிலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், மொத்தமாகப் பார்க்கும்போது பொருளாதாரம் மெள்ள சீரான வேகத்தில்தான் மீளும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மேலும், நாட்டில் பணப் புழக்கத்தை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தற்போது ரிசர்வ் வங்கி எடுத்துவருகிறது. கோவிட்-19 காரணமாக பாதிப்பிற்குள்ளாகியுள்ள துறைகளையும் நிறுவனங்களையும் காக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ரிசர்வ் வங்கி தயாராகவே உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: நடப்பாண்டில் மொத்த வரி வருவாய் 22.5% சரிவு