டெல்லி: கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனர் மல்லையாவின் சொத்துக்களை விற்று கடன் தொகையை மீட்ட வங்கிகள் திட்டமிட்டுள்ளன. அதன்படி, அவரின் ஐந்தாயிரத்து 646 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விற்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வரையில் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற அவரை நாடு கடத்தி அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கடன் மோசடி தொடர்பாக, எஸ்.பி.ஐ. வங்கி தலைமையில் கடன் வாங்கிய 17 வங்கிகள் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. அதனைத் தொடர்ந்து, விஜய் மல்லையாவிற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. அதில் குறிப்பிட்ட சில சொத்துக்களை வங்கிகள் குழுமத்திற்கு வழங்க மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
கடந்த வாரத்தில் இதேபோன்று வேறு சில சொத்துகளை வங்கிகள் குழுமத்துக்கு வழங்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், இந்த உத்தரவை எதிர்த்து மல்லையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.