சென்னை: கட்டுமானப் பொருட்களின் விலை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளதால் கட்டுமானத் துறை கலக்கத்தில் உள்ளது.
புதிய கட்டடப் பணிகளை முடக்கியுள்ளது. கரோனா பெருந்தொற்று, பொது முடக்கம் காரணமாக ஏற்கெனவே தொழில் பாதிப்படைந்துள்ள நிலையில் இது தங்களுக்கு மேலும் சுமையை கொடுப்பதாக கட்டுமானத்துறையினர் கூறுகின்றனர். அண்மைக்காலத்தில் கட்டுமான பொருட்களின் விலை சுமார் 20 விழுக்காடு வரை உயர்வு கண்டுள்ளன.
அசுர விலையேற்றம்
மார்ச் மாதத்தில் 400 ரூபாய்க்கு விற்பனையான ஒரு மூட்டை சிமெண்ட் தற்போது 520 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் சிமெணட் விலை 350 ரூபாயாக இருந்தது. எம் சாண்ட் பருமன் அடி அளவில் 58 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அவை 65 முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை சென்றுள்ளது.
கட்டுமானக் கம்பி டன் ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இது 58 ஆயிரம் ரூபாயாக இருந்தது. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் கம்பி 38 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
செங்கல் 3000 கற்கள் என்ற எண்ணத்திற்கு 3,500 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மணல் யூனிட் ஒன்று 5,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் பழைய விலை 3,800 ரூபாயாக இருந்தது. ஜல்லி யூனிட் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக விலை ஏற்றம் கண்டுள்ளது.
மரக்கட்டை பருமன் அடி அளவில் 2,500 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 3,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவை அனைத்தும் கடந்த மார்ச் மாத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
தற்போது கரோனா பொது முடக்கம் காரணமாக கட்டுமான பகுதியிலேயே தொழிலாளர்கள் தங்கியிருக்கும் கட்டடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெகு சில நிறுவனங்களே கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளன.
இருப்பினும் இந்த விலை உயர்வால் தங்களது செலவு அதிகரித்து, வாடிக்கையாளர்களுக்கு ஒப்புக்கொண்ட விலையில் வீடுகளைக் கட்டி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கட்டுமான நிறுவனர்கள் கூறுகின்றனர்.
இழப்பை சரிசெய்ய விலையேற்றம்
இது தொடர்பாக பேசிய அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்க மாநில செயலாளர் ராம்பிரபு, "எஃகு நிறுவனங்கள், சிமெண்ட் நிறுவனங்கள் கூட்டாக செயல்பட்டு விலையை ஏற்றி வருகின்றன. அவர்களுக்கு உற்பத்தி செலவு இவ்வளவு அதிகரித்திருக்க வாய்ப்பில்லை. கரோனா தொற்று மற்றும் பொது முடக்கத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடகட்டுவதற்காக இவ்வாறு விலையை ஏற்றுகின்றனர். இது சரியல்ல.
பெருந்தொற்று பாதிப்பால் பல கட்டுமான நிறுவனங்களும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நேரத்தில் மேலும் விலையை அதிகரிப்பதால் கட்டுமான நிறுவனங்கள் மிகப் பெரிய அளவில் நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இதுதவிர பெயின்ட், எலக்டிரானிக் ஹார்ட்வேர் பொருட்களின் விலையும் 15 முதல் 20 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
இதனால் கட்டுமான நிறுவனங்களின் செலவு குறுகிய காலத்தில் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனை வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதலாக வசூலிக்க வேண்டியுள்ளது. சாமானிய மக்களின் வீடு வாங்கும் கனவு கனவாகவே போகிறது.
மத்திய, மாநில அரசுகள் கட்டுமான பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். கட்டுமான நிறுவனங்களை நெறிப்படுத்த ஆணையம் இருப்பதைப் போல கட்டிடக் கம்பிகள் மற்றும் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
இதற்கு மத்தியில் தற்போது கட்டுமானத் துறையில் வெறும் 25 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே உள்ளதாக தொழில்துறையினர் கூறுகின்றனர். ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதும் அவர்கள் மெல்ல திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
விற்பனை தேக்கமடைய வாய்ப்பு
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவாரி பிராப்பர்டிஸ் நிறுவன பங்குதாரர் ராஜேஷ் லுண்ட் இது குறித்து பேசும்போது, "கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டை வாங்குபவர்களிடம் ஏற்கெனவே விலையை குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்துவிட்டதால் இனி கூடுதல் செலவை அவர்களிடம் இருந்து பெற முடியாது.
விற்கப்படாத வீடுகளின் விலையைத் தான் உயர்த்த வேண்டும். இதனால் விற்பனை தேக்கமடையும். ஏற்கெனவே ஊரடங்குக்குப் பிறகு புதிதாக வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. நாங்கள் கைபேசிகள், காணொலிகள் மற்றும் மெய்நிகர் தொழில்நுட்பம் மூலமாக வீடுகளைக் காட்சிப்படுத்தினாலும் வீடு வாங்குபவர்கள் நேரில் வந்து இடத்தைப் பார்த்து தேர்வு செய்வதையே விரும்புகின்றனர்.
பெரு நகரங்களில் இதுபோன்றவை பயனளித்தாலும் சிறிய நகரங்களில் மக்கள் நேரில் வீட்டைப் பார்த்து, விற்பனையாளரிடம் பேரம் பேசி வாங்குவதையே மக்கள் விரும்புகின்றனர்.
மேலும் வங்கிகள் வீட்டுக்கடன் வழங்குவதில்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் உள்ளன" என்று கூறினார்.
மத்திய மாநில அரசுகள் கவனிக்க
வீடு போன்றவற்றுக்கு மக்கள் மத்தியில் எந்த நேரத்திலும் தேவை இருக்கும் எனக் கூறும் கட்டுமானத் துறையினர், துறையில் உள்ள பிரச்னைகளைக் களைய வேண்டும் என மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கின்றனர்.
குறிப்பாக மத்திய அரசு, கட்டுமான பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும், கட்டுமான நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டிக்கு உள்ளீட்டு வரிப் பலன்களை வழங்க வேண்டும் என்கின்றனர்.
நாட்டிலேயே 11 விழுக்காடு என்றளவில், தமிழ்நாட்டில் தான் மிக அதிகமாக பத்திரப்பதிவு கட்டணம் உள்ளதாக கூறும் கட்டட நிறுவனங்கள், இதனை குறைக்க வேண்டும் என நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதன்மூலம் பத்திரப் பதிவுகள் அதிகரித்து அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என அவர்கள் வாதிடுகின்றனர். மேலும் புதிய கட்டுமானத் திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர அனுமதி வழங்க வேண்டும் என மாநில அரசை வலியுறுத்துகின்றனர்.