கடந்த சில மாதங்களாகவே அரசுக்கு செலுத்த வேண்டிய கோடி கணக்கான ரூபாயை உடனடியாக செலுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை நெருக்கடி கொடுத்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் முதலில் 10,000 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தியது.
அதனைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை வோடபோன்-ஐடியா நிறுவனம் நிலுவை தொகையில் 2,500 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தியது. மேலும் நிலுவை தொகையை முழுமையாக செலுத்த முடியாது என்றாலும் 1,000 கோடி ரூபாயை அடுத்த இரண்டு நாட்களில் செலுத்துவாக அறிவித்தது. இந்நிலையில் இன்று அந்த ஆயிரம் கோடி ரூபாயை அரசுக்கு வோடபோன்-ஐடியா நிறுவனம் செலுத்தியுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது
வோடபோன்-ஐடியா நிறுவனம் அரசுக்கு மொத்தம் 53,000 கோடி ரூபாய் நிலுவை தொகை செலுத்த வேண்டியுள்ள நிலையில் இதுவரை வெறும் 3,500 கோடி ரூபாயை மட்டுமே செலுத்தியுள்ளது. பாக்கி உள்ள நிலுவை தொகையை மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்த நிலையில் இன்று மாலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை வோடபோன்-ஐடியா நிறுவனத்தின் தலைவரான குமார மங்களம் பிர்லாவும், ஏர்டெல் நிறுவனத்தின் தலைவரான சுனில் பார்தி மிட்டலும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சரிவில் முடிந்த பங்குச்சந்தை!