நிதி நெருக்கடி காரணமாக யெஸ் வங்கியின் நிர்வாகம் ரிசர்வ் வங்கிக்கு கீழ் கொண்டுவரப்பட்டு வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் முடியாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்கள் சொந்தப் பணத்தை எடுக்கவே வாடிக்கையாளர்கள் சிரமப்படும் நிலையில் வாடிக்கையாளர்கள் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம் என நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகியோர் உத்தரவாதம் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மாநிலம் வதோதரா நகராட்சி நிர்வாகம் தனது சமயோஜிதமான நடவடிக்கையால் ரிசர்வ் வங்கியின் இந்த தீடீர் உத்தரவில் இருந்து தப்பித்துள்ளது. யெஸ் வங்கியின் செயல்பாட்டில் ஏற்பட்ட ஐயம் காரணமாக தங்கள் பட்டயக் கணக்கரை தொடர்புகொண்ட வதோதரா நகராட்சி நிர்வாகம் அதன் 256 கோடி ரூபாய் நிதியை யெஸ் வங்கியிடம் சிக்கிக்கொள்ளாமல் தற்காத்துள்ளது.
இதுகுறித்து வதோதரா நகராட்சியின் துணை அணையார் சுதிர் பாட்டேல்:
எங்கள் வதோதரா நகராட்சியின் திறன்மிகு நகர் கணக்கு யெஸ் வங்கியிடம் இருந்தது. அந்த கணக்கு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறை கண்காணிக்கப்படும். அப்போது யெஸ் வங்கியின் நிர்வாகச் செயல்பாடு குறித்து எங்கள் பட்டயக் கணக்கர் சந்தேகம் எழுப்பினார். அதில் யெஸ் வங்கியின் நிதி நிலைமை தற்போது சரியில்லை எனவும், கணக்கில் இருக்கும் தொகையை தேசியமையமாக்கப்பட்ட வங்கி ஒன்றுக்கு மாற்ற அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து ஒட்டுமொத்த தொகையான ரூ.256 கோடியை பேங்க் ஆஃப் பரோடாவுக்கு மாற்றிவிட்டோம் என நிம்மதியுடன் தெரிவித்துள்ளார்.
இதேபோல் திருப்பதி கோயிலின் வைப்புத்தொகை ரூ. 1,300 கோடியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த மாதம் முன்னெச்சரிக்கையாக மாற்றியுள்ளது.
இதையும் படிங்க: யெஸ் வங்கி நிறுவனர் ரானா கப்பூர் கைது