யுபிஐ எனப்படும் Unified Payments Interface என்ற முறையைப் பயன்படுத்தி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பணம் செலுத்தும் முறை கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த முறையை பயன்படுத்தி உடனடியாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பணம் செலுத்த முடியும் என்பதாலும் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை என்பதாலும் இந்த முறை இந்தியாவில் ஹிட் அடித்தது.
இந்நிலையில், அக்டோபர் மாதம் மட்டும் யுபிஐ முறையை பயன்படுத்தி சுமார் 200 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தலைமை நிர்வாக அலுவலர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமிதாப் காந்த் தனது ட்விட்டரில், "கடந்தாண்டு அக்டோபர் மாதம் 114 கோடி பரிவர்த்தனைகள் யுபிஐ முறையில் மேற்கொள்ளப்பட்டன. இந்தாண்டு அதிலிருந்து 80 விழுக்காடு அதிகரித்து, 200 கோடி பரிவர்த்தனைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. அதேபோல, கடந்தாண்டு ரூ.1,91,359.94 கோடி பரிவரத்தனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 3,86,106.74 கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
கரோனா காரணமாக மக்கள் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அஞ்சுவதும், டிஜிட்டல் பரிவர்த்தனை முறை உயர முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பணம் டெபாசிட் செய்தால் ரூ.50 கட்டணம் - ஐசிஐசிஐ வங்கி அதிரடி