இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் கோவிட்-19 ஏற்படுத்திய தாக்கம் குறித்து லின்ங்க்ட் இன் நிறுவனம் விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், இந்திய ஊழியர்களின் மனநலம் குறித்த தலைப்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வுத் தகவலின்படி, நாட்டில் ஐந்தில் இரண்டு ஊழியர்கள் கோவிட்-19 காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளான வேலையின்மை, வருவாய் பற்றாக்குறை போன்றவையும், மன ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் தனிமை, வீட்டிலிருந்தே வேலை போன்ற அம்சங்களும் இந்த மன அழுத்தத்திற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
ஆய்வில் 41 விழுக்காட்டினர் தங்கள் துறை ரீதியாக தொய்வைக் கண்டுள்ளதாகவும், 37 விழுக்காட்டினர் தனிமையை உணர்வதாகவும், 36 விழுக்காட்டினர் வேலை-வாழ்க்கை இரண்டையும் சரியாகக் கையாள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் 23 விழுக்காட்டினர் மட்டும்தான் தங்கள் பணிச்சூழல் சாதகமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 17 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக லிங்க்ட் இன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனா காலத்திலும் சிறப்பாக செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்