கரோனா வைரஸ் நோய் காரணமாக உலக நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளன. இதனால், இந்தியாவில் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் நோக்கில் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் அமல்படுத்தப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார். இதனிடையே, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டம் குறித்து தொடர்ந்து விளக்கிவருகிறார். இந்நிலையில், பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பொருளாதார நிபுணர் முரளிதர் பதிலளித்தார்.
நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் குறித்த உங்கள் முதற்கட்ட கருத்து என்ன?
ஐந்து துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஒட்டுமொத்த 20 லட்சம் கோடி ரூபாய் நிதியை செலவழிக்கவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதன்மையாக, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் வெகுநேரம் பேசினார். எந்த தொழில் நிறுவனங்களுக்கும் நேரடி பணபரிமாற்றம் செய்யப்படவில்லை. ஆனால், சிறிய அளவிலான சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதை எதிர்நோக்கியே காத்துக் கொண்டிருந்தன. வங்கியில் கடன் பெற விரும்புவோருக்கு இது நல்ல திட்டம்தான். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நல்ல தொடக்கமே.
தற்சார்பு குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்புகள் திருப்புமுனையாக அமையுமா?
இது திருப்புமுனையாக இருக்கும் என நான் சொல்லவில்லை. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையில், வங்கிகளின் வாரா கடன், நிலையான சொத்து ஆகிய இரண்டுக்கும் கூடுதல் மூலதனம் வழங்கப்பட்டுள்ளது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் அதிக கடன் பெற்று வணிகத்தை தொடர்ந்து மேற்கொள்ள இது உதவும். கடந்த இரண்டு மாதங்களில், பணம் இல்லாத காரணத்தால், இந்நிறுவனங்கள் மோசமாக செயல்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் அதற்கு பெரிய உதவியாக இருக்கும். எனவே, இதனை திருப்புமுனை என சொல்ல முடியாது. 200 கோடி ரூபாய்க்காக பொதுத்துறை நிறுவனங்களை ஒப்பந்தம் விடாமல் இருப்பது நல்ல நடவடிக்கை. ஏனெனில், மூல பொருள்கள், உலோகங்களை தயார் செய்யும் இந்தியாவைச் சேர்ந்த சில சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஒப்பந்தம் விடப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை சீன தயாரிப்பாளர்களுடன் போட்டியிட முடியவில்லை.
3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் உத்திரவாதம் இல்லாத வங்கிக் கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில், ஆண்டுகளில் கடனை பெறுவதற்காகவே சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலில் பலர் ஈடுபடுவார்கள் என நீங்கள் நினைக்கவில்லையா?
இந்த உத்திரவாதம் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களுக்கா? அல்லது புதிய நிறுவனங்களுக்கா? என்ற தெளிவு நிதியமைச்சரின் அறிவிப்பில் இல்லை. 25 கோடி ரூபாய் மூலதனம் அல்லது மொத்த வருவாய் 100 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனங்களக்கு இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக எவ்வளவு ஒதுக்கப்படும் என்பது தெரியவில்லை. செயல்பாட்டிற்கு வரும்போதுதான், இதன் விளைவுகள் தெரியும்.
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அறிவிப்புகளை ஒரு தொழிலதிபராக எப்படி பார்க்கிறீர்கள்?
இது நல்ல திட்டமே. 3 லட்சம் கோடி மதிப்பிலான உத்திரவாதம் இல்லாத வங்கி கடன், 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான வாரா கடன் ஆகியவை குறித்து தெளிவு இல்லை. வாராக் கடனுக்கு இன்னும் அதிகம் கூட ஒதுக்கி இருக்கலாம். இந்த அறிவிப்பு கொஞ்சம் ஆபத்தானதே. ஆனால், நஷ்டத்தில் செயல்படும் நிறுவனங்களை மீட்கும் வகையில் அதிக நிதி ஒதுக்கி துணிச்சலான முடிவை எடுத்திருக்கலாம். முன்னதாக, இதற்கு மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் பெரிய அளவு ஆபத்து இல்லை. இதன்மூலம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் பணப்புழக்கத்தை அதிகரிக்கலாம். ஆர்பிஐயில் முதலீடு செய்து 3 விழுக்காடு ரிவர்ஸ் ரெப்போ வட்டி பெறும் வங்கியாளர்களுக்கு தற்போது அதிக வட்டி கிடைக்கும்.
இதையும் படிங்க: கரோனா: இந்தியாவுக்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை வழங்கும் உலக வங்கி