இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ்-இல் 4.5 லட்சம் பேர் வேலைசெய்து வருகின்றனர். கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பை சரிசெய்ய பல்வேறு நிறுவனங்களும் தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்து ஆட்குறைப்பு செய்து வருகிறது. ஆனால் சில நாள்களுக்கு முன் டிசிஎஸ் நிறுவனம் சார்பில் தொழிலாளர்கள் யாரும் இடைநீக்கமோ அல்லது பணிநீக்கமோ செய்யப்பட மாட்டார்கள் என அறிவித்தது.
இந்நிலையில், இன்று ஊழியர்கள் அனைவருக்கும் இந்த வருடத்தில் ஊதிய உயர்வு வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. இதுகுறித்து டாடா குழும நிர்வாக இயக்குநர் ராஜேஷ் கோபிநாதன் பேசுகையில், ''புதிதாக டாடா குழுமத்தில் பணி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட 40 ஆயிரம் ஊழியர்களுக்கும் மரியாதை கொடுக்கப்படும். அவர்களின் பணி நியமன ஆணை எந்த நேரத்திலும் நிறுவனத்தால் திரும்பப்பெறப்பட மாட்டாது.
தற்போது கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதால் ஜூன் மாதத்திற்கு பிறகு புதிய ஊழியர்கள் பணிக்கு வருவார்கள். இந்த ஆண்டில் டாடா நிறுவனம் 12.1 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இது மிகச்சிறந்த ஒன்றாகும்.
தற்சமயத்தில் டாடா குழுமத்தின் 3.55 லட்சம் ஊழியர்கள் இந்தியாவில் பணி செய்து வருகிறார்கள். அவர்களின் 90 சதவீதம் பேர் வீட்டிலிருந்தபடியே பணி செய்கிறார்கள். இவ்வாறு பணியாற்றுவதால் நிறுவனத்தில் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் எங்களுக்கு இது மிகப்பெரிய படிப்பினையைக் கற்றுக்கொடுத்துள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: கரோனா: ரூ. 1,500 கோடி நிதியுதவி அறிவித்த டாடா!