டெல்லி: அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலையைத் தொடர்ந்து, சிறிய ரக மின்சார கனரக வாகனங்களை சந்தைப்படுத்த டாடா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல் - டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருள்களின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, மாற்று சக்தியே இதற்கு தீர்வுவென, பயனர் வாகன சந்தையில் மின்சார வாகனங்களின் வரவு வரிசை கட்டி நிற்கிறது.
இந்த சூழலில், டாடா நிறுவனமும் பயனர் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து சந்தைபடுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக கனரக மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து, சந்தைப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
முதலில் டாடா ஏஸ் போன்ற சிறிய ரக கனரக வாகனங்களின் மின்சார மாடலை டாடா நிறுவனம் களமிறக்க முனைப்புக்காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல், சின்ஜி எரிவாயு அம்சம் கொண்டும் சிறிய ரக கனரக வாகனங்களை உற்பத்தி செய்ய நிறுவனம் தீர்மானித்துள்ளது.
முதலீடு
டிபிஜி என்ற தனியார் முதலீட்டு நிறுவனம் மற்றும் அபுதாபியை சேர்ந்த ஏடிகியூ ஆகிய நிறுவனங்களிடமிருந்து 7500 கோடி ரூபாய் முதலீட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த முதலீட்டைக் கொண்டு மின்சார வாகன உற்பத்திக்காக தனி பிரிவு செயல்படும் என்றும், புதிய மாடல் வாகனங்கள், எலக்ட்ரிக் பேட்டரி, சார்ஜிங் நிலைய கட்டமைப்புக்காக முதலீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாடா நெக்ஸான் மின்சார கார் (Tata Nexon EV)
இது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாடா-வின் இரண்டாவது மலிவு விலை மின்சார எஸ்யுவி ரக கார் ஆகும். மேலும் இதன் போட்டியாளரான எம்ஜி ZS மின்சார காரை விட கிட்டத்தட்ட 6 முதல் 7 லட்சம் குறைவாக விற்கப்படுகிறது.
இது தவிர டாடா நெக்ஸான் இவி, மணிக்கு 30.2 கிலோ வாட் பேட்டரி திறனைக் கொண்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ வரை பயணிக்கலாம். இது முன்புறத்தில் பொருத்தபட்டிருக்கும் நிரந்தர காந்த ஒத்திசைவு மோட்டார் மூலம் 129PS பவர் மற்றும் 245Nm பீக் டார்க் திறனை வழங்குகிறது.
நெக்ஸான் மின்சார கார் 8.5 மணி நேரத்தில் 15ஏ சாக்கெட் மூலம் சார்ஜ் செய்யலாம். வேகமான சார்ஜர் மூலம், பேட்டரியை சுமார் 60 நிமிடங்களில் 80 விழுக்காடு வரை சார்ஜ் செய்ய முடியும். நெக்ஸான் மின்சார காரின் விலை ரூ .13.99 லட்சத்தில் தொடங்கி ரூ .16.85 லட்சம் வரை இருக்கிறது (இடங்களுக்கு தகுந்தாற்போல் மாறும்).
ரிமோட் டயக்னொஸ்டிக், ரேஞ்ச், சார்ஜிங் ஸ்டேட்டஸ் போன்ற 30-க்கும் மேற்பட்ட அம்சங்களுடன் சிப்ட்ரான் தொழில்நுட்பம், iRA இணைக்கப்பட்ட தொகுப்பையும் இந்த வாகனத்துடன் பயனர்கள் அனுபவிக்கலாம்.
இதையும் படிங்க: மாஸ் காட்டும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்