இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2005ஆம் ஆண்டு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. டெலிகாம் நிறுவனங்களின் மொத்த வருவாயை கணக்கிடும்போது மொபைல்ஃபோன் விற்பனை, டிவிடெண்ட் எனப்படும் பங்கு ஆதாயம், கட்டங்களின் வாடகை உள்ளிட்டவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று விதிகள் மாற்றியமைக்கப்பட்டன.
இதனை எதிர்த்து பாரத் ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில், இறுதியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகையை செலுத்துவது சாத்தியமில்லை என்பதால் தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை தயாரித்து உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்தது. அதன்படி அடுத்த 20 ஆண்டுகளில் திருத்தியமைக்கப்பட்ட மொத்த வருவாயை டெலிகாம் நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை என்ற விகிதத்தில் செலுத்த வேண்டும்.
கடந்த முறை நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின்போது தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் இந்த புதிய திட்டத்தை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், "அடுத்த 20 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்" என்றும் கேள்வி எழுப்பியது.
அப்போது தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, "ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய தொகை செலுத்துவது கடினம். எனவே, அரசு உருவாக்கியுள்ள இந்தப் புதிய திட்டத்தை உச்ச நீதிமன்றம் எதிர்த்தால், அது டெலிகாம் துறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை சந்திப்பார்கள்" என்றார்.
இந்த டெலிகாம் நிறுவனங்களைத் தவிர அரசு பொதுத்துறை நிறுவனங்களும் சுமார் 2.65 லட்சம் கோடி ரூபாயை திருத்தியமைக்கப்பட்ட மொத்த வருவாயாக செலுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் நிலுவைத் தொகை இவ்வளவு அதிகமானது ஏன் என்று அரசு வழக்கறிஞருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
டெலிகாம் நிறுவனங்களின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருன் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, எஸ். அப்துல் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்குவருகிறது.
இதையும் படிங்க: ஏர்டெல்லுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் நஷ்டம்!