2005ஆம் ஆண்டு டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியது. அதன்படி, சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (adjusted gross revenue) அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.
இந்த புதிய விதிமுறைகளின்படி மொத்த வருவாயில் மொபைல்ஃபோன் விற்பனையில் ஈட்டப்படும் வருவாய், டிவிடெண்ட் எனப்படும் பங்கு ஆதாயம், வாடகை உள்ளிட்டவற்றிலிருந்து வரும் வருவாயையும் கணக்கில் கொண்டு கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டன. இதனை எதிர்த்து பாரத் ஏர்டெல், வோடோஃபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய விதிமுறைகளின்படி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அபராதத்துடன் சேர்த்து சுமார் ரூ.92 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்குச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் ஏர்டெல் ரூபாய் 21 ஆயிரத்து 682 கோடியும் வோடோஃபோன் ரூபாய் 19 ஆயிரத்து 822 கோடியும் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ஜியோவின் வருகையால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் லாபம் பெரிதும் குறைந்துவரும் இந்தச் சூழ்நிலையில் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன.
மேலும், இந்த அபராதத்தொகையை ஆறு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிஎஸ்என்எல்-க்கு ஒரு வழியாக 4ஜி சேவைக்கு ஒப்புதல்!