டெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி காங்கிரஸ் ஆளும் முதலமைச்சர்கள் மற்றும் பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ஜிஎஸ்டி குறித்து பேசுகையில், “சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) நிலுவை தொகையில் மத்திய அரசு மாநில அரசுகளை வஞ்சிக்கிறது. ஆகவே, மத்திய அரசுக்கு எதிராக வலுவான முறையில் போராடி வேண்டும் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டார்.
இந்தக் காணொலி வாயிலான கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசுகையில், “நாங்கள் பிச்சை எடுக்கவில்லை. இவை எங்கள் மாநிலத்தின் நிலுவைத் தொகை. மேற்கு வங்கத்திற்கு இன்னும் மத்திய அரசிடமிருந்து ரூ.53 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. மற்ற நிதி எதுவும் கிடைக்கவில்லை. இதே நிலை நீடித்தால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பது மிகவும் கடினம். இது மிகவும் கடுமையான நிலைமை” என்றார்.
மம்தா பானர்ஜியின் கருத்தை ஒப்புக்கொண்ட பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், “மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
கரோனா வைரஸை சமாளிக்க எங்களிடம் பணம் இல்லை. சம்பளம் மற்றும் பிற இழப்பீடுகளை நாங்கள் எவ்வாறு செலுத்துவோம் என்று சில சமயங்களில் யோசித்துக்கொண்டிருக்கிறேன். நாங்கள் ஏற்கனவே கரோனா வைரஸுக்கு கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் செலவிட்டோம்.
எங்கள் மாநிலங்களின் நிதி முற்றிலும் குறைந்துவிட்ட சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு இன்னமும் செலுத்தவில்லை. நாங்கள் கூட்டாக பிரதமரைப் சந்திக்க வேண்டும்” என்றார்.
மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறுகையில், “முதலமைச்சர்கள் தங்களின் உரிமைகளுக்காக மத்திய அரசுக்கு எதிராக வலுவான போராட்டத்தை நடத்த வேண்டும்.
அதற்கு முன்னர் நாம் போராட வேண்டுமா அல்லது பயப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க வேண்டும் ... நாம் போராட விரும்பினால், அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “ஏப்ரல் மாதத்திலிருந்து மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை கிடைக்கவில்லை. மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாங்கள் பல முறை இது தொடர்பாக அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம், ஆனால் சில சமயங்களில் எங்களுக்கு பதில் கிடைக்கிறது, பல சமயங்களில் உரிய பதில் கூட கிடைப்பதில்லை” என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையில், ஜிஎஸ்டி கவுன்சில் நாளை (ஆக.27) கூடுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டைக் காண்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
இதையும் படிங்க: 'ஜிஎஸ்டி வருவாய் மறுப்பு; மாநிலங்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம்'- சோனியா காந்தி