கோவிட்-19 பரவல் காரணமாக மார்ச் இறுதியில் அனைத்து விமான நிறுவனங்களும் தங்கள் சேவையை நிறுத்திக்கொண்டன. மார்ச் முதல் சுமார் இரண்டு மாதங்கள் சரக்கு விமான சேவைக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டது.
மே மாதம் இறுதியில் உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதியளிக்கப்பட்டது. இருப்பினும், பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அதிலிருந்து போதிய வருவாயை விமான நிறுவனங்களால் ஈட்ட முடியவில்லை.
இந்நிலையில், கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மட்டும் ரூ.593.4 கோடி இழந்துள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.3,002.1 கோடியாக இருந்த வருவாய் இந்தாண்டு ரூ.514.7 கோடியாக உள்ளது என்று ஸ்பைஸ்ஜெட் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு இதேகாலகட்டத்தில் ரூ.261.7 கோடி ரூபாய் லாபம் அடைந்திருந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், இந்தாண்டு ரூ.593.4 கோடி இழந்துள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறிக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் கூறுகையில், "விமான துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான நெருக்கடியை தற்போது எதிர்கொண்டுள்ளது. இருப்பினும், மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் ஸ்பைஸ்ஜெட் சிறப்பாக இருந்துள்ளது.
வரும் காலங்களில் மேலும் பல மாநிலங்கள் பயணம் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்ததும் என்று நம்புகிறேன். இதன்மூலம் விமான போக்குவரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைப் போலவே இண்டிகோ நிறுவனமும் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 2,844.3 கோடி ரூபாய் இழப்பைப் பதிவுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய நிறுவனங்களில் ரூ.7,300 கோடியை முதலீடு செய்துள்ள சீனா!