மலையேற்றம் மேற்கொள்பவர்கள் தடாலடியாக கிடுகிடுவென உச்சியை அடைய வேண்டும் என நினைக்க மாட்டார்கள். அதுவும் பாதி தூரம் ஏறி சருக்கி விழுந்தவர்கள் அடுத்த அடியை நின்று நிதானமாக எடுத்து வைப்பார்கள். அவர்களுடைய லட்சியம் உச்சியை அடைய வேண்டும் என்பதுதானே தவிர, உடனே உச்சியை அடைய வேண்டும் என்பதல்ல. மலையேற்றத்தைப்போலதான் பங்குச்சந்தைகளும் விழுந்த அடி அப்படி. ஆகவே, நின்று நிதானமாக ஏறி உச்சியை அடையும்.
கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 150 டாலர்களைத் தொடும் எனக் கூறிவந்த நிலையில் பேரல் ஒன்று 111 டாலராக விலை குறைந்து வர்த்தகமாகி வருவது சற்றே ஆறுதல் தரும் விஷயம். அதற்கு முக்கியக் காரணம் ஐக்கிய அமீரக கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை சற்றே அதிகரிக்கப்போவதாக தெரிவித்ததுதான்.
அரபு அமீரக கூட்டமைப்பும் என்ன செய்யப்போகிறது எனத் தெரியவில்லை. அண்டை நாடான இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 75 ரூபாயும் உயர்ந்ததாகத் தகவல்கள் வெளியாகி பீதியைக் கிளப்பின.
ஆட்டோமொபைல் மொத்த விற்பனை பிப்ரவரியில் 23% சரிவடைந்துள்ளது. ஏற்றுமதிக்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை, வாகனங்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றைக் குற்றம் சாட்டுகின்றனர், ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள்.
டிசம்பர் காலாண்டில் எல்ஐசி இந்தியாவின் லாபம் ரூ.235 கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய ஆண்டு லாபம் ரூ.0.91 கோடியாக இருந்தது. டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில் லாபம் ரூ.7.08 கோடியிலிருந்து ரூ.1,642.78 கோடியாக உயர்ந்துள்ளது.
ரஷ்யா, உக்ரைன் போர் எதிரொலி
உலகத் தலைவர்களின் எதிர்வினைகள், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே உயர் மட்ட பேச்சுவார்த்தைகள் பலனலிக்கவில்லை என்ற தகவல்கள் சந்தையை மேலும் முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியாமல் இருதலைக்கொல்லி எறும்பாக தவித்தன.
வாரத்தின் வர்த்தக நாள் இறுதியில் அள்ளியும் கொடுக்காமல் கிள்ளியும் கொடுக்காமல் சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்ந்தும் நிஃப்டி 36 புள்ளிகள் உயர்ந்தும் நிறைவு செய்தன. இன்றைய வர்த்தகத்தில் சிப்லா 6 விழுக்காடும், சன்பார்மா, பி.பி.சி.எல்., ஜே.எஸ்.டபில்யூ ஸ்டீல், ஐ.ஓ.சி ஆகியன தலா மூன்று விழுக்காடும் உயர்ந்து முடிந்தன.
இதையும் படிங்க: இந்தியப் பங்குச் சந்தையில் அதகளம்; அமர்க்களம்