கரோனா (கோவிட்19) வைரஸின் பரவல் காரணமாக நாடு முடங்கியுள்ளது. கடந்த மாதம் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஒருநாள் மக்கள் ஊரடங்கு, அதன் பின்னர் 21 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் நிதித் திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்தின்படி ஜன்தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு மூன்று மாதத்துக்கு ரூ.500 வீதம் ரூ.1500 வழங்கப்படும். இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதில் எஸ்.பி.ஐ. வங்கி தள்ளாடிவருகிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற எஸ்.பி.ஐ. தயாரித்துள்ள திட்டத்தில் குழப்பம் உள்ளது.
இது தொடர்பாக எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கிக் கணக்கு எண்கள் 0 மற்றும் 1 உடன் முடிவடையும் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 3 ஆம் தேதி பணத்தை எடுக்கலாம். இதேபோல் 2 மற்றும் 3 உடன் முடிவடையும் கணக்கு எண்களைக் கொண்டவர்கள் ஏப்ரல் 4 ஆம் தேதியும், 4 மற்றும் 5ஆம் எண்கள் கொண்டவர்கள் 7ஆம் தேதியும், 6 மற்றும் 7 எண்களை முடிவாக கொண்டவர்கள் ஏப்ரல் 8ஆம் தேதியும், 8 மற்றும் 9 ஆம் எண்களை கொண்டவர்கள் 9ஆம் தேதியும் பெற்றுக் கொள்ளலாம்.
ஏப்ரல் 9ஆம் தேதிக்குப் பிறகு பயனாளிகள் எந்த தேதியிலும் தங்களின் பணத்தை பெற்றுக் கொள்ளலாம்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, வங்கிகள் வாடிக்கையாளர்கள் அதிகமாக ஒன்று கூடுவதைத் தவிர்க்க முயலுகின்றன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதே இதற்கு காரணம்.
இதையும் படிங்க: இ.எம்.ஐ. தளர்வு விருப்பத்தை வாடிக்கையாளர்களிடம் வழங்கிய ஆக்ஸிஸ் வங்கி