ரிலையன்ஸ் நிறுவனம் 2019-20ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருந்தது. அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 39 விழுக்காடு குறைந்து 6,348 கோடியாக உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு இதே காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 10,362 கோடியாக இருந்தது. கோவிட்-19 பரவல் காரணமாக எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறைகளில் தேவை குறைந்துள்ளதால் லாபம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளதால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆற்றல் துறை நிறுவனங்கள் ரூ.4,245 கோடி நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. ரிலையன்ஸ் சுத்திகரிப்பு நிறுவனம், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை சுத்திகரிப்பதன் மூலம் அடையும் லாபம் ஒன்றுக்கு 9.2 டாலர்களிலிருந்து 8.9 டாலர்களாக குறைந்தது இதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அதேநேரம் ரிலையன்ஸின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோவின் நிகர லாபம் ரூ. 840 கோடியிலிருந்து மூன்று மடங்கு உயர்ந்து ரூ. 2,331ஆக உள்ளது.
ஒரு மாதத்தில் ஒரு வாடிக்கையாளர் செலவழிக்கும் தொகையும் ரூ. 128.4 இல் இருந்து 130.6ஆக உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ. 53,125 கோடி முதலீட்டை ஈர்க்கும் திட்டத்திற்கும் ரிலையன்ஸ் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்திய பங்குச் சந்தையின் வியாழக்கிழமை வர்த்தக நாளில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.86 விழுக்காடு உயர்ந்து ரூ.1,467ஆக நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனாவால் அமேசான் லாபம் பெரும் சரிவு!