இந்தியாவில் மளிகைப் பொருள்கள், ஆடைகள் எனப் பலவற்றை விற்கும் நாட்டின் பெரிய சங்கிலித் தொடர் கடைகளை பிக் பஜார், பிரண்ட் ஃபேக்டரி எனப் பல பெயர்களில் ஃபியூச்சர் குழுமம் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக, மெட்ரோ நகரங்களில் பிக் பஜாருக்கு மிகப்பெரிய அளவு வரவேற்பு உள்ளது.
இந்தியாவின் சில்லறை விற்பனை சந்தை, 2017ஆம் ஆண்டு சுமார் 800 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது வரும் 2026ஆம் ஆண்டின்போது சுமார் 1.75 டிரில்லியன் டாலர்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் சில்லறை விற்பனை சந்தையைப் பிடிக்க முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் ஆர்வம் காட்டிவருகின்றன.
கடன் சிக்கல்களை தற்போது எதிர்கொண்டுவரும் ஃபியூச்சர் நிறுவனம் நாட்டில் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் கொண்டிருப்பதால், அந்நிறுவனத்தை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர். குறிப்பாக, நாட்டின் மிகப் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் ஃபியூச்சர் குழுமத்தின் 1.3 விழுக்காடு பங்குகளை வாங்கியது.
அதைத்தொடர்ந்து விரைவில் ஃபியூச்சர் குழுமத்தை ரிலையன்ஸ் நிறுவனம் முழுமையாக வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில், ரிலையன்ஸ் குழுமம் ரூ. 24,713 கோடி ரூபாய்க்கு ஃபியூச்சர் குழுமத்தை வங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் நாட்டின் சில்லறை வர்த்தகத்துறையில் அமேசான் - ஃபிளிப்கார்ட் - ரிலையன்ஸ் என்ற மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
ஏற்கெனவே, இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தை கைப்பற்றும் நோக்கில் ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோமார்ட்-ஐ தொடங்கியுள்ள நிலையில், ஆப்லைனிலும் தனது இருப்பை அதிகரித்துக்கொள்ள ஏதுவாக தற்போது ஃபியூச்சர் குழுமத்தையும் ரிலையன்ஸ் வாங்கியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா காரணமாக அதிகம் வேலையிழந்தவர்கள் இந்த வயதுடையவர்கள்தான்