சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய கட்டுநர் சங்கத் தலைவர் மோகன், ”நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகளவில் பத்திரப்பதிவு கட்டணம் உள்ளது. பதிவுக் கட்டணத்தை 11 லிருந்து 4 விழுக்காடாக குறைக்க வேண்டும். அண்டை மாநிலமான கர்நாடகா, மகாராஷ்டிராவில் அண்மையில் பதிவுக் கட்டணம் 5 லிருந்து 4 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.
சாதாரண மக்கள் வீடு வாங்க 38% வரி கட்ட வேண்டியுள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு வீடு வாங்கினால் பத்திரப்பதிவு, முத்திரை வரி, ஜிஎஸ்டி வரி, தண்ணீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளைச் சேர்த்து 38 லட்ச ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டியுள்ளது. இது தொடர்பாக அரசு அலுவலர்களை சந்தித்து பேசியும் எங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படவில்லை.
மத்திய அரசு எங்களது கோரிக்கையை பரிசீலித்து திட்டங்களை முடிக்க 6 மாத கால அவகாசம், கடனை திரும்பச் செலுத்த அவகாசம் உள்ளிட்ட சலுகைகளை வழங்கியுள்ளது. மற்ற மாநிலங்களில் காணொலி மூலம் அமைச்சர்களை அணுக முடிகிறது. ஆனால், தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், அலுவலர்கள் வசமிருந்து எங்களுக்கு எந்தப் பதிலும் இல்லை.
அதேபோல் கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு அரசு 6 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவைத்தொகை வழங்க வேண்டியுள்ள நிலையில், புதிய ஒப்பந்தங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு நிலுவைத் தொகையை வழங்காததால் ஒப்பந்ததாரர்கள் கடன்களை திரும்ப செலுத்த முடியவில்லை. மேலும், ஆன்லைன் மூலம் கட்டுமானங்களுக்கான ஒப்புதல் வழங்கும் முறை, சரியாக இயங்கவில்லை. ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் “ எனக் கூறினார்.
இதையும் படிங்க: 2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்? நிதியமைச்சகம் கூறுவது என்ன?