நெஃப்ட் எனப்படும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் இந்தியாவில் கடந்த 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. வணிகர்கள் பெரும்பாலும் அதிகாரப்பூர்வமாக பணப் பரிமாற்றம் செய்ய நெஃப்ட் சேவையையே விரும்புவதால், இந்தியாவில் மிக முக்கிய பணப் பரிமாற்ற சேவைகளில் ஒன்றாக உள்ளது.
நெஃப்ட் பணப் பரிமாற்றம் தற்போது வரை வங்கி செயல்படும் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை பணப் பரிமாற்றம் செய்யமுடியும். இதனால், விடுமுறை நாட்களில் பணப் பரிமாற்றம் செய்ய முடியாமல் பலரும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில்," டிசம்பர் மாதம் முதல் நெஃப்ட் சேவை 24 மணி நேரமும் வாரத்தின் அனைத்து நாட்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது. இது இந்தியாவின் பணப் பரிமாற்ற சேவையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் நெஃப்ட் உள்ளிட்ட ஆன்லைன் பணப் பரிமாற்றத்துக்கு வசூலிக்கப்பட்டு வந்த சேவை கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது.