இந்தியாவில் கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த வரும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
பெரும் மந்தநிலையும், ஊரடங்கும்
அப்போது பேசிய அவர், "உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட்-19 வைரஸ் தொற்றால் மனித இனம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. இந்தச் சூழலில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் குறித்து ரிசர்வ் வங்கி நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்துவருகிறது.
2020ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் செல்லும் என்று சர்வதேச நிதியம் ஏப்ரல் 14ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது. இது 1930-களில் காணப்பட்ட பெரும் மந்தநிலையைவிட (The Great Depression) மோசமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2020-21ஆம் நிதியாண்டில் சர்வதேச அளவில் உற்பத்தி பெரும் சரிவைச் சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெரும் ஊரடங்கு (The Great lockdown) என்று சர்வதேச நிதியம் பெயரிட்டுள்ளது. இந்தச் சரிவு 9 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது ஜப்பான், ஜெர்மனி நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகம்.
எந்தெந்தத் துறைகள் பாதிப்பு
கரோனா பாதிப்பால் ஏற்றுமதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் ஏற்றுமதி 34.6 விழுக்காடாக இருந்தது. இது 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின்போது ஏற்பட்ட சரிவைவிட அதிகம். அதேபோல மின்சாரத் தேவையும் 20 முதல் 25 விழுக்காடு வரை குறைந்துள்ளது. மேலும், ஆட்டோ மொபைல் துறையில் தயாரிப்பு, விற்பனை என இரண்டிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
2021-21ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 விழுக்காடாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் வளர்ச்சி 1.9 விழுக்காடாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் பெரும்பாலான ஜி20 நாடுகளைவிட அதிகம்.
ரிவர்ஸ் ரெப்போ விகிதம்
சிறு, குறு தொழில் துறையினருக்குக் கடன் வழங்க ஏதுவாக வங்கிகளில் பணம் கையிருப்பு உள்ளதை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தரும் கடன்களுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4 விழுக்காட்டிலிருந்து 3.75 விழுக்காடாக குறைக்கப்படுகிறது. இந்த ஊரடங்கு காலத்தில் இணையதள பயன்பாடு, இணையதள பணப்பரிமாற்ற சேவை ஆகியவை கணிசமாகக் கூடியுள்ளது.
மாநிலங்களுக்குக் கூடுதல் கடன்
இந்தாண்டு நெல் பயிரிடப்படும் பரப்பளவு 37 விழுக்காடுவரை அதிகரித்துள்ளது. மேலும், அத்தியாவசிய உணவுப் பொருள்கள் போதிய அளவில் கையிருப்பு உள்ளதால் தட்டுப்பாடு ஏற்படாது. கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய மாநில அரசுகள் 60 விழுக்காடுவரை கூடுதலாகக் கடன் பெறலாம்.
பங்குச் சந்தை தங்குதடையின்றி செயல்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டிலுள்ள 91 விழுக்காடு ஏடிஎம்கள் வழக்கம்போல செயல்படுகின்றன. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பணவீக்கம் குறைந்துள்ளது.
ரூ.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
விவசாயம், சிறு, குறு தொழில்செய்வோர் ஆகியோருக்கு கடன் வழங்கும் வகையில் நபார்டு,, என்.ஹெச்.பி உள்ளிட்ட வங்கிகளுக்கு ரூ.50 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'ரேப்பிட் சோதனைக் கருவிகள் வைரஸ் தொற்றைக் கண்டறிய பயன்படாது'