இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தில் தொலைதொடர்புத் துறையின் பங்களிப்பு அளப்பரியது. இந்தியாவின் ஜிடிபியில் தொலைதொடர்புத் துறை 6.5 சதவீதம் பங்கு வகிக்கிறது. 5ஜி புரட்சிக்குப் பின்னர் அதனை 8.2 சதவீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொலைதொடர்புத் துறையை விளிம்பு நிலைக்கு கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
கடந்த அக்டோபர் 2019 உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, தொலைதொடர்புத் துறை இந்திய அரசாங்கத்துக்கு வருகிற ஜனவரி 23ஆம் தேதிக்குள் 1.47 லட்சம் கோடி ரூபாயை செலுத்த வேண்டும். இந்தத் தீர்ப்புக்கு எதிராக தொலைதொடர்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு ரத்து செய்தது. இது தொடர்பாக தொலை தொடர்பு நிறுவனங்கள் அளித்த மனுவில், ஏற்கனவே 29 - 32 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டிருப்பதே சிரமமாக உள்ளதென தெரிவித்துள்ளது.
மத்திய அரசாங்கம் ஜூலை 2019இல் சமர்பித்த அறிக்கையின்படி,
ஏர்டெல் - 21,682 கோடி ரூபாய்
வோடஃபோன் - 19,823 கோடி ரூபாய்
ரிலயன்ஸ் - 16,456 கோடி ரூபாய்
எம்டிஎன்எல் - 2,537 கோடி ரூபாய்
பிஎஸ்என்எல்- 2,098 கோடி ரூபாய் முறையே லைசன்ஸ் கட்டணமாக குறிப்பிடப்பட்டிருந்தது.
தொலைதொடர்பு நிறுவனங்கள் திருத்தப்பட்ட மொத்த வருவாயையும் மத்திய அரசுக்கு செலுத்த சம்மதம் தெரிவித்தன. ஆனால் அரசாங்கம் அளித்த திருத்தப்பட்ட மொத்த வருவாய் பற்றி முறையான விளக்கம் கேட்டன. மத்திய அரசாங்கம் விதித்த லைசன்ஸ் கட்டணங்களையே சரிவர கட்ட முடியாமல் தொலைதொடர்பு நிறுவனங்கள் தவிக்கும் வேளையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவைகளை மேலும் சிக்கலுக்குள் தள்ளியிருக்கிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பில், பெரும் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் சரியான வருவாய் கணக்குகளை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சூழல் நீடித்தால் வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் மூட வாய்ப்புள்ளதாக தொழில்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
1999ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசாங்கம் தொலைதொடர்புத் துறை முன்னேற்றம் காண முக்கியமான முடிவுகளை எடுத்தது. இது புதிய தொலைதொடர்பு கொள்கைக்கு அடித்தளமாக அமைந்தது. அதன்படி தொலைதொடர்பு நிறுவனங்கள் பல ஆண்டுகள் லைசன்ஸ் கட்டணம் செலுத்தாமல், வருவாய் பகிர்தலுடன் ஒருமுறை நுழைவுக் கட்டணம் செலுத்தினால் போதும்.
2013ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மொத்த வருவாயை 15 சதவிகிதத்தில் இருந்து, 8 சதவிகிதத்துக்கு அரசாங்கம் குறைத்து அறிவித்தது. 2004ஆம் ஆண்டு தொலைதொடர்பு நிறுவனங்களின் கூட்டு வருவாயாக இருந்த 4,855 கோடி ரூபாய், 2015ஆம் ஆண்டு 2,38,000 கோடியாக உயர்ந்திருந்தது.
திருத்தப்பட்ட மொத்த வருவாய் குறித்து அரசாங்க வரைவு கொள்கையில் அளிக்கப்பட்டிருந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட தொலைதொடர்பு நிறுவனங்கள், அதிலிருந்து பின்வாங்குவதே தற்போது நிகழும் பிரச்னைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
2017 - 2019ஆம் ஆண்டுகளில் 1 GB டேட்டா 8 ரூபாய் என ஜியோ உள்ளே நுழைந்தபோது, மற்ற ஆப்பரேட்டர்கள் 25% நஷ்டத்தை சந்தித்தன. 2015ஆம் ஆண்டு 174 ரூபாயாக இருந்த தனிநபர் வருவாய், சமீபத்தில் 113 ரூபாய் என்ற நிலைக்கு வந்துள்ளது. இந்த சூழலில் தொலைதொடர்பு நிறுவனங்களை 1.40 லட்சம் கோடி ரூபாய் செலுத்தச் சொன்னால், அந்தத் துறை வீழ்ச்சியை சந்திக்கும்.
5ஜி, ஏஐ போன்ற சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சி, மத்திய அரசாங்கத்தையும் தொலைதொடர்புத் துறையையும் வெற்றிப்பாதையை நோக்கி பயணிக்கச் செய்யும். தொலைதொடர்புத் துறையின் அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தின் தகவல்படி, நாடு முழுவதுமாக 3,468 லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தொலைதொடர்புத் துறை அல்லாத நிறுவனங்களுக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பொருந்தும் என கூறப்பட்டுள்ள நிலையில், அரசு துறை நிறுவனங்களுக்கு மட்டும் ரூ. 3 லட்சம் கோடி கடன் உள்ளது.
பவர் கிரிட் போன்ற நிறுவனங்கள் சக்தி (power) பரிமாற்றத்தின் மூலம் 95% வருவாயையும், தொலைதொடர்பு சேவைகள் மூலம் 2% வருவாயையும் ஈட்டுகிறது. தொலைதொடர்பு சேவைகள் மூலம் 742 கோடி ரூபாயை ஈட்டும் பவர் கிரிட் நிறுவனம், 59 கோடி ரூபாயை லைசன்ஸ் கட்டணமாக செலுத்த வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொலைதொடர்பு அல்லாத துறைக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பவர் கிரிட நிறுவனம் ரூ. 1.25 லட்சம் கோடி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கேஸ் பயன்பாட்டுக்கான மாநில அரசாங்கத்தின் கெயில் இந்தியா நிறுவனம், ரூ. 1.72 லட்சம் கோடி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் மாநில அரசாங்க நிறுவனங்களும் உள்ளனவா என சரிவர தகவல்கள் இல்லை. ஸ்பெக்ட்ரத்துக்கான 42,000 கோடி ரூபாய் கட்டணத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு செலுத்தலாம் என மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கு முன்பு சரியான அலைக்கற்றை விநியோகம் இல்லாததே இந்த மோசமான நிலைக்கு காரணம் என கூறப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஏலத்தின்மூலம் அளவுகடந்த லாபத்தை ஈட்டிய மத்திய அரசு, அதற்கு மேலும் லைசன்ஸ் கட்டணம் விதிப்பதற்கு வணிக நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தேசம் முழுவதும் 5 ஜி புரட்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் வேளையில், தொலைதொடர்புத் துறையில் நிலவும் நிலையற்ற தன்மை லாபகரமானதல்ல...