பிளிப்கார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான போன் பேசி செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 205 மில்லியனைத் தாண்டியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "மாதந்தோறும் 100 மில்லியன் பயனாளர்கள் இந்தச் செயலியை பயன்படுத்துகின்றனர். அக்டோபர் மாதம் மட்டும் 2.3 பில்லியன் முறை இந்தச் செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு, 925 மில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. அதில், 277 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிவர்த்தனை ஆகியுள்ளது. சந்தையில் 40 விழுக்காடு பரிவர்த்தனைகள் போன்பே மூலமாகவே நடைபெற்றுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து போன்பே நிறுவனர் சமீர் நிகம் கூறுகையில், "டிசம்பர் 2022ஆம் ஆண்டுக்குள் 500 மில்லியன் பயனாளர்களை எட்டுவதையே லட்சியமாக கொண்டுள்ளோம். பல்வேறு வயது பயனாளர்களை கவரும் நோக்கில் பல திட்டங்களை அறிவித்து உள்ளோம். இந்தியாவின் அனைத்து கிராமங்களிலும் இதனைப் பயன்படுத்தும் நோக்கில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" என்றார்.
பேடிஎம், மோபிக்விக், கூகுள் பே உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை செயலிகள் போன்பே செயலுக்கு கடும் சவாலை விடுகின்றன. ஓலா, கோஐபிபோ, ரெட் பஸ், ஓயோ உள்ளிட்ட செயலிகளிலும் போன்பே செயலி மூலம் பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம்.