நாட்டில் டீசல் விலை மிக அதிகமாக ஹைதராபாத்தில் லிட்டருக்கு ரூ.83 ஆக உள்ளது. மும்பை மற்றும் ஜெய்ப்பூரில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90 என்ற சாதனை அளவை தாண்டியுள்ளது. ராஜஸ்தானில் பிரீமியம் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.100க்கும் அதிகமாகும். அக்டோபர், 2018ல், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ .75 ஆகவும் இருந்தபோது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 80 அமெரிக்க டாலர்களாக இருந்தது.
சுமார் ஒரு வருடம் முன்பு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 70 டாலர்கள், மூன்று மாத காலத்திற்குள் அது 50 விழுக்காடு சரிந்தது. இன்று கச்சா எண்ணெயின் விலை 55 டாலர்கள், ஆயினும் பெட்ரோலிய எரிபொருள்களின் உள்நாட்டு சில்லறை விலை சாதனை அளவை எட்டியுள்ளது. இதில் முரண்பாடு என்னவென்றால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியினால் நாட்டின் எரிபொருள் நுகர்வோருக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. சர்வதேச சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலைகளை நிர்ணயித்தல் என்ற பெயரில் நுகர்வோர் ஒவ்வொரு முறையும் விலை உயர்வின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மறுபுறம், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோ விலை உயர்வுக்கு ஒரு விசித்திரமான நியாயத்தை முன்வைக்கிறார். அவரைப் பொறுத்தவரை, எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் (OPEC) ஒரு நியாயமான விலையில் வழங்குவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதன் விளைவாக விலை உயர்வு ஏற்பட்டது என்று கூறுகிறார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் எண்ணெய் தேவை கடுமையாக வீழ்ச்சியடைந்த நிலையில், OPEC நெருக்கடியான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டதாகவும்,. உள்ளூர் தேவை வீழ்ச்சியடைந்த போதிலும் தொடர்ந்து எரிபொருள் இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியா OPECகை மீட்டது என்று அவர் மேலும் கூறியுள்ளார். இந்த ஆதரவைக் கருத்தில் கொண்டு ஒரு நியாயமான விலைக்கு எண்ணெய் வழங்குவதாக அந்த அமைப்பு உறுதியளித்திருந்தது என்று அமைச்சர் கூறினார். OPEC தனது வார்த்தையை நிறைவேற்றத் தவறிவிட்டதன் விளைவாக பெட்ரோல் விலை அதிகரிக்கிறது என்பதுதான் அமைச்சரின் வாதத்தின் முக்கிய அம்சம் .
சர்வதேச விலைகள் உயர்கிறதா அல்லது வீழ்ச்சியடைகிறதா என்பதைப் பொருட்படுத்தாமல், இங்குள்ள அரசாங்கங்கள் பெட்ரோலிய விலையை உயர்த்துகின்றன, மேலும் விலைகளுக்கு கூடுதல் செஸ் விதிக்கின்றன. இது மக்களைக் கொள்ளையடிப்பதற்கு சமம் அல்லவா?
இந்தியாவின் பெட்ரோலிய விலை தெற்காசியாவில் மிக அதிகம். மாநில மற்றும் மத்திய அரசுகள் பெட்ரோலிய எரிபொருட்களுக்கு வரி விதித்து விலை உயர்வுக்கு பங்களிப்பு செய்கின்றன. முன்னதாக, அரசாங்கங்கள் விதித்த வரி பெட்ரோல் விலையில் 56 விழுக்காடும், டீசல் 36 விழுக்காடும் என்று ரங்கராஜன் குழு கூறியிருந்தது. சமீபத்திய தரவுகளின்படி, பெட்ரோ விலைகளுக்கு அரசாங்கம் விதித்திருப்பது பெட்ரோல் விலையில் 67 விழுக்காடாகவும், டீசல் விலையில் 61 விழுக்காடாகவும் இருந்தது. எரிபொருள் துறையிலிருந்து மத்திய அரசின் வருமானம் 2015 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலத்தில் இரட்டிப்பாகியுள்ளது என்ற உண்மையை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன, அதே நேரத்தில் அதே துறையைச் சேர்ந்த மாநில அரசுகளின் வருமானமும் 38 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பெட்ரோல் பயன்பாடு கணிசமாகக் குறைந்திருந்த கரோனா தொற்றுநோய்களின் போது கூட, பெட்ரோலியத் துறையிலிருந்து மத்திய அரசின் வருவாய் அதிகரித்து வந்ததாக கணக்குக் கட்டுப்பாட்டு ஜெனரல் (CAG) தெரிவித்துள்ளது. நாட்டின் தடுமாறும் பொருளாதாரத்தின் புத்துயிர் பெறுவதற்கான ஆதாரமாக எரிபொருள் உள்ளது. மக்களின் பொருளாதார நடவடிக்கைகளையும் மீட்டெடுப்பதற்கு பெட்ரோலியம் இன்றியமையாதது. அதற்காகவே LPG, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அனைத்து பெட்ரோலிய எரிபொருட்களும் GSTயின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும், இதனால் அவற்றின் விலைகள் கட்டுக்குள் இருக்கும். மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டால், லிட்டருக்கு ரூ.30க்கு பெட்ரோல் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய மதிப்பீடுகளின் பின்னணியில், எரிபொருட்களுக்கு வரி விதிப்பது சரியான அளவில் இருப்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். சர்வதேச எரிபொருள் விலைகள் எதிர்பார்ப்பதை விட உயர்ந்தாலும், நாட்டின் நீண்டகால நலன்களைப் பாதுகாக்க எரிபொருள் விலையில் வரி விதிப்பது குறைவாக இருக்க வேண்டும். ஏற்கனவே மக்களின் வாழ்க்கை தொற்றுநோயால் பாழாகிவிட்டது. பெட்ரோலிய விலைகள் மீது மேலும் திணிப்பதைத் தவிர்ப்பதன் மூலம், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் மக்களின் வாழ்க்கையை மேலும் மோசமாகாமல் தவிர்க்கலாம்.