நமது அன்றாடத் தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விலை நிர்ணய முறையின் கீழ் பெட்ரோல், டீசல் விலைகள் அதிரடியான மாற்றங்களைக் கண்டு வருகிறது. அந்த வகையில், தொடர்ந்து 12ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் லிட்டருக்கு 53 காசுகளும், டீசல் லிட்டருக்கு 64 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை 77.28 ரூபாயில் இருந்து 77.81 ரூபாயாகவும், டீசல் விலை 75.79 ரூபாயில் இருந்து 76.43 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக மாநில எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் விலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 81.32 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 74.23 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை ஆறு மணி முதல் அமலுக்கு வந்தது.
இதையும் படிங்க: நிச்சயம் கரோனாவை வெல்வோம் - உலக சுகாதார அமைப்பு