டெல்லி : டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது. இந்நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டுவது இது முதல்முறையாகும்.
தேசிய தலைநகரில் பெட்ரோல் 100 ரூபாய் 21 காசுகளாக விற்பனையாகிறது. கொல்கத்தாவை பொறுத்தவரை 100 ரூபாய் 23 காசுகளாக உள்ளது.
மும்பை மற்றும் சென்னையை பொறுத்தவரை ரூ.106, ரூ.101.06 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பெங்களூரு, புவனேஸ்வர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பாட்னா மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட 24க்கும் மேற்பட்ட நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது.
அதேபோல் டீசல் விலையும் தலைநகரில் ரூ.100-ஐ நெருங்குகிறது. அந்த வகையில், டீசல் விலை டெல்லி (89.53), மும்பை (97.09), கொல்கத்தா (92.50), சென்னை (94) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரில் ஏற்கனவே டீசல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது.
மே4ஆம் தேதியிலிருந்து 36 முறை பெட்ரோல், டீசல் எரிபொருள்கள் விலை மாற்றியமைக்கப்பட்டு, ரூ.7-8 வரை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் கூடியுள்ளது.
இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் விலையை திமுக நினைத்தால் குறைக்கலாம்- அன்புமணி