கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமானப் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டிருந்த நிலையில், மே 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதையடுத்து வெளிமாநிலங்களில் சிக்கிய பல்லாயிரக்கணக்கானோர் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பினர்.
இதனிடையே விமான டிக்கெட்கள் விலையும் ஏற்றமடைந்ததாக பலரும் அதிருப்தி தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இதனைச் சரிசெய்யும் விதமாக இண்டிகோ விமானப் போக்குவரத்து நிறுவனம் 'ப்ளக்ஸ் பே' (Flex Pay) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தில், பயணிகள் டிக்கெட்டுக்கான 10 விழுக்காடு பணத்தை மட்டும் செலுத்தி, தங்களது டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம். மீதமுள்ள 90 விழுக்காடு பணத்தை, முன்பதிவு செய்த 15 நாள்களிலோ அல்லது பயணம் செய்வதற்கு முன்னதாக உள்ள 15 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
பயணிகள் யாரும் 10 விழுக்காடு பணம் செலுத்தி முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்துசெய்தால், அவர்கள் செலுத்திய பணம் திருப்பி அளிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட இருவர் தனி விமானம் மூலம் சென்னை - கொல்கத்தா பயணம்!