இந்தியாவில் கோவிட்-19 பரவலுக்கு முன்னரே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடும் சிரமத்தைச் சந்தித்துவந்தன. விற்பனை பெருமளவு குறைந்ததால் டிவிஎஸ், மாருதி போன்ற நிறுவனங்கள் வேலையில்லா நாள்களை கடைப்பிடித்தன.
அதைத்தொடர்ந்து கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கார் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் கார் விற்பனை என்பது கிட்டத்தட்ட முற்றிலுமாக முடங்கியது.
அதன்பின் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து கார் விற்பனை ஜூன் மாதம் முதல் மெல்ல அதிகரித்துவருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் கார்களின் விற்பனை 14.16 விழுக்காடு அதிகரித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதாவது ஆகஸ்ட் மாதம் மட்டும் இந்தியாவில் 2,15,916 கார்கள் விற்பனை செய்யப்பட்டன. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,89,129 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, கடந்த ஆண்டு 15,14,196 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்தாண்டு இரு சக்கர வாகனங்களின் விற்பனை மூன்று விழுக்காடு அதிகரித்து 15,59,665ஆக உள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு 9,37,486 இருந்த பைக்குகளின் விற்பனை இந்தாண்டு 10.13 விழுக்காடு அதிகரித்து 10,32,476ஆக உள்ளது. ஆனால், ஸ்கூட்டர்களின் விற்பனை 5,20,898இல் இருந்து 12.3 விழுக்காடு குறைந்து 4,56,848ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 9 விழுக்காடு சரிவைச் சந்திக்கும் - கிரிசில் அமைப்பு தகவல்