நாடு முழுவதும் அமலில் உள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்த சர்ச்சைகள், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழித்தும் தீர்ந்த பாடில்லை. ’இட்லிக்குலாம் ஜிஎஸ்டி போடுறாங்கப்பா” எனப் பொதுமக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது நம் நாட்டு மக்களின் பிரியத்திற்குரிய உணவு வகைகளில் ஒன்றான பரோட்டவால் ஜிஎஸ்டி பேசுபொருளாக மாறியுள்ளது.
’ஐடி ப்ரெஷ் புட்’ என்ற கடையின் உரிமையாளர் ஜிஎஸ்டியின் ’அத்தாரிட்டி ஆஃப் அட்வான்ஸ்ட் ரூலிங்’ (ARR) என்ற தீர்ப்பாயத்தில் கேள்வியொன்றை எழுப்பியுள்ளார். அதில் ”உணவுப்பொருள்களான ரொட்டி, சப்பாத்தி ஆகியவற்றுக்கு ஐந்து விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படுகையில், பரோட்டாவுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வசூலிப்பது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு AAR கூறிய விளக்கம்தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ’ரெடி டூ ஈட்’ எனப்படும் உடனடியாக சாப்பிடத்தக்க உணவுகள் வகையில் சப்பாத்தி, ரொட்டி ஆகியவை உள்ளன. அதே வேளை, பரோட்டாவை சூடு செய்த பின்னரே உண்ண முடியும் என்பதால் அது வேறு பிரிவில் சேர்க்கப்பட்டு, அதற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாக AAR தெரிவித்துள்ளது.
ஒரு உணவுப்பொருளை சூடு செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக 13 விழுக்காடு கூடுதலாக பரோட்டாவுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டு பரோட்டா பிரியர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 100% நேரடி அந்நிய முதலீடு : நிலக்கரி சுரங்கங்களை ஏலம்விடும் மத்திய அரசு!