ஓயோ நிறுவனர் ரித்தேஷ் அகர்வால் உலகின் இரண்டாவது இளம் கோடீஸ்வரர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ’ஹூருன் குளோபல்’ (Hurun Global) வெளியிட்டுள்ள பட்டியலின்படி, அவரது சொத்து மதிப்பு 1.1 பில்லியன் (ரூ. 7,800 கோடி) என கணக்கிடப்பட்டுள்ளது.
18 வயதில் தொழிலதிபர்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரான ரித்தேஷ் அகர்வால், தன்னுடைய 17ஆவது வயதில் கல்லூரி படிப்பின்போது, அவருக்குத் தோன்றிய யோசனையின் அடிப்படையில், 2013ஆம் ஆண்டு 18 வயதில் ஓயோ (OYO) நிறுவனத்தைத் தொடங்கினார்.
தடைகளைத் தாண்டி வெற்றி
விடுதி அறைகளை (Hotel Room) ஓயோ ஆப் வழியாக புக்கிங் செய்ய தொடங்கப்பட்ட இந்தத் தொழிலில், இளம் வயதிலேயே பல தடைகளைக் கடந்து சாதனை புரிந்துள்ளார். தற்போது பல விடுதி அறைகளை ஓயோ ஆப் வழியாக புக்கிங் செய்ய முடியும். ’ஓயோ ரூம்ஸ்’ தற்போது இந்தியாவில் பல நகரங்களில் செயல்பட்டுவருகிறது.
ஓஹோ... சொல்லவைக்கும் ஓயோவின் வளர்ச்சி
800க்கும் மேற்பட்ட நகரங்களில் பல நாடுகளில், 23 ஆயிரம் ஹோட்டல்களை இணைக்கும் வகையில் ஓயோ ஆப் வளர்ச்சி கண்டுள்ளது. கிட்டத்தட்ட 8 லட்சத்து 50 ஆயிரம் அறைகளை இந்த ஆப் மூலம் புக்கிங் செய்யும் வகையில் ஓயோ வளர்ச்சி கண்டுள்ளது.
ரித்தேஷை பாராட்டிய டிரம்ப்
இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், டெல்லியில் நடைபெற்ற தொழில் அதிபர்கள் உடனான சந்திப்பில் ரித்தேஷ் அகர்வாலை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹூருன் குளோபல் பட்டியலின்படி 1.1 மில்லியின் டாலர் சொத்து மதிப்புள்ள, அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயதான கைலி ஜென்னர் இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: 'மினி சாதனையாளன் டெனி' - அடுத்த இலக்கு கின்னஸ்..!