கரோனா பரவல் காரணமாக மார்ச் இறுதி வாரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்தும் சேவைகளும் முடங்கின. அதன்படி திரையரங்குகளும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகளை அறிவிக்கப்பட்டுவரும் நிலையில், திரையரங்குகளை திறக்க சமீபத்தில் மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து திரையரங்கை திறக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது.
இருப்பினும், கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வர தயக்கம் காட்டுவதால், திரையரங்குகளில் எதிர்பார்த்த கூட்டம் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்களை கவர திரையரங்கு நிறுவனங்கள் பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துவருகிறது.
அதன்படி இரண்டாயிரம் ரூபாய்க்கு சிறிய ஸ்கீரின் கொண்ட திரையரங்கையும், 4000-5000 ரூபாய்க்கு பெரிய ஸ்கீரின் கொண்ட திரையரங்கையும் புக் செய்யும் புதிய வசதியை பிவிஆர் சினிமாஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதேபோல் ஐநாக்ஸ் நிறுவனமும் 2999 ரூபாய்க்கு மொத்த திரையரங்கை புக் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், புக் செய்யும் திரையரங்கில் விரும்பும் திரைப்படத்தை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா காலத்தில் திரையரங்கு நிறுவனங்களின் இந்தப் புதிய திட்டம் மக்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விற்பனை உயர்வு!